சிகிச்சையின்போது ஓய்வு அதிகாரி சாவு..! தனியார் மருத்துவமனை முற்றுகை: புதுக்கோட்டையில் பரபரப்பு

புதுக்கோட்டை, ஏப். 14: மருத்துவ சிகிச்சையின்போது ஓய்வு பெற்ற தனியார் அதிகாரி இறந்ததால், உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை நகரப் பகுதிக்கு உட்பட்ட மச்சுவாடி அருகே உள்ள சுப்ரமணியபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (63). வேளாண்மை துறை ஓய்வுபெற்ற உதவி கணக்கு அலுவலர். இவர் நேற்று புதுக்கோட்டை பேராங்குளம் அருகே உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்வதற்காக சிகிச்சைக்காக சேர்ந்தார். டயாலிசிஸ் செய்யும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையின் நிர்வாக சீர்கேட்டால் தான் கணேசன் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மருத்துவமனையை மூடி சீல் வைக்க வேண்டும், கணேசனின் உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

இதனையடுத்து மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது கணேசனின் உறவினர்களிடம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராமு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கணேசனின் உடலை பிரேத பரிசோதனை செய்து அதில் வரும் முடிவுபடி நடவடிக்கை எடுக்கப்படும். சந்தேக மரணம் என்று வழக்கு பதியப்படும் என்று போலீசார் மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் தரப்பில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சமாதானம் அடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கணேசன் உடலை பிரேத பரிசோதனை செய்ய புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>