10 ஆண்டாக அடிப்படை வசதிகள் இல்லை மாநகராட்சியை கண்டித்து மக்கள் மறியல் திண்டுக்கல் அருகே பரபரப்பு

திண்டுக்கல், ஏப். 14: திண்டுக்கல் அருகே அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் வேடபட்டி அருகேயுள்ளது ராவணன் தெரு. இங்கு சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவி–்ல்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று வேடபட்டி ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்பே பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘ராவணன் தெருவில் கடந்த 10 ஆண்டாக எந்தவித அடிப்படை வசதியும் மாநகராட்சி செய்து தரவில்லை. இதுகுறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. விரைவில் அடிப்படை வசதிகள் செய்து தராவி–்ட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்’ என்றனர். இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் செந்தில்முருகனிடம் கேட்டபோது, ‘அந்த பகுதி மாநகராட்சி இணைந்ததா என்பது சந்தேகத்திற்குரியதாக உள்ளது. என்றாலும், அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories:

>