ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கு வசதியாக கூடுதல் படுக்கைகள் கலெக்டர் பேட்டி

நாகர்கோவில், ஏப்.14:  கொரோனா நோயாளிகளுக்கு வசதியாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் படுக்கை வசதி 500 ஆக அதிகரிக்கப்படும் என்று குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுநோய் பிரிவில் தற்போது 200 படுக்கைகள் உள்ளது. மேலும் ஒரு சில தினங்களில் கொரோனா மையத்தில் கூடுதலாக 300 படுக்கைகள் அமைக்கப்படவுள்ளது. மொத்தமுள்ள 500 படுக்கைகளில் 200 படுக்கைகளில் ஆக்ஸிஜன் வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது. காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களை கண்டறிய தற்போது சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளிலுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினி கிளினிக், தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் மட்டும் மாவட்டத்தில் 4,100 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை குமரி மாவட்டம் முழுவதும் சுமார் 65,000க்கும் மேற்பட்டவர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரு தெருவில் 3 வீடுகளுக்கு மேல் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அப்பகுதி தடைசெய்யப்பட்ட பகுதியாக கருதப்படும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார். நாகர்கோவில் ஆர்டிஒ மயில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அருள்பிரகாஷ், உறைவிட மருத்துவர் டாக்டர் எஸ்.ஆறுமுகவேலன், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சுசீலா ஆகியோர் உடனிருந்தனர்.

சாதாரண அறுவை சிகிச்சை நிறுத்தம்

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அருள்பிரகாஷ் கூறியதாவது: கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பொது மருத்துவ கட்டிட பிரிவுகள்  கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படுகின்றன. ஏற்கனவே முதல்கட்ட பாதிப்பின்  போது செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளும் தற்போது செய்யப்பட இருக்கிறது.   இதனால் மிக முக்கியமான அவசர அறுவை சிகிச்சைகள் தவிர, பிற சாதாரண அறுவை  சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இதே போல் புறநோயாளிகள்  பிரிவில் டாக்டர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட உள்ளது. டாக்டர்கள்  கொரோனா சிகிச்சை மையங்களில் பணியாற்ற செல்வதால் விதிமுறைப்படி அவர்கள் ஒரு  வாரம் தனிமைப் படுத்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கையால் புறநோயாளிகள்  பிரிவில் டாக்டர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும்.  விபத்து  சிகிச்சைகள், பச்சிளம் குழந்தை சிகிச்சைகள், பிரசவ கால சிகிச்சைகள், உயிர்  காக்கும் அவசர அறுவை சிகிச்சைகள் உள்ளிட்டவை வழக்கம் போல் நடைபெறும்.  இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பொதுமக்கள் சாதாரண சிகிச்சைகளுக்கு  தங்கள் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களையோ அல்லது அருகில் உள்ள  அரசு மருத்துவமனைகளையோ அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மிகவும்  அவசியம் மற்றும் அவசரம் கருதி மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு வரலாம். தற்போது கொரோனா நோயாளிகளை முழுமையாக குணப்படுத்தி அவர்களுக்கு தேவையான  அனைத்து விதமான சிகிச்சைகள் செய்யும் நடவடிக்கைகள்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா நோயாளிகளுக்கான டயாலிசிஸ், பிரசவம்  உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு  ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>