×

குளித்தலையில் காவல்துறை சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்: வியாபாரிகள் சங்கத்தினர் பங்கேற்பு

குளித்தலை, ஏப்.14: குளித்தலையில் காவல்துறை சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வியாபாரிகள் சங்கத்தினர் கலந்துகொண்டனர். குளித்தலை இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமை வகித்தார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நாவுக்கரசர் வியாபாரிகள் இடையே பேசியதாவது: குளித்தலை நகரத்தை பொறுத்தவரை பெரிய பாலம் மாரியம்மன் கோயில் கடைவீதி பேரால் அம்மன் கோயில், பெரியாண்டவர் தெரு, குளித்தலை பஸ் நிலையம், காவேரி நகர், அண்ணா நகர், உழவர் சந்தை, தினசரி காய்கறி மார்க்கெட், கடம்பர் கோவில் சுங்ககேட் போன்ற இடங்களில் பொதுமக்கள் அன்றாடும் அதிகமாக கூடும் இடமாக இருந்து வருகிறது.

தற்போது கொரோனா 2வது அலை வீசுவதால் வியாபாரிகள் தங்கள் நிறுவனத்திற்கு வரும் பொதுமக்கள் முக கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். சானிடைசர் போட்ட பிறகு கடைக்கு வர வேண்டும் என கட்டுப்பாடுகளை விதித்து, அனுமதிக்க வேண்டும். பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்க அறிவுறுத்த வேண்டும். கிராமத்திலிருந்து நகரத்திற்கு பஸ்களிலும், டூவீலரிலும் வருபவர்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும், தவறினால் காவல்துறை, சுகாதாரத் துறை, நகராட்சி பணியாளர்கள் மூலம் ரூ.200 வசூலிக்கப்படும் என்றார். கூட்டத்தில் குளித்தலையில் உள்ள அனைத்து வியாபாரிகளும், கடை உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.

Tags : Corona ,Kulithalai ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...