×

திருப்போரூர் தொகுதியில் தபால் வாக்குப்பெட்டி பாதுகாப்பாக உள்ளதா? அரசியல் கட்சிகள், தேர்தல் அதிகாரிகளுக்கு கேள்வி

திருப்போரூர்: திருப்போரூர் தொகுதியில் சீல் வைக்காத பெட்டியில் போடப்படும் வாக்கு சீட்டுகளால், தபால் வாக்குப்பெட்டி பாதுகாப்பாக உள்ளதா என அரசியல் கட்சிகள், தேர்தல் அதிகாரிகளுக்கு  கேள்வி எழுப்பியுள்ளனர். திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருக்கழுக்குன்றம் அருகே தண்டரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வளாகத்தைச் சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்போரூர் தொகுதியில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான தபால் வாக்குகள் தேர்தலுக்கு முன்பு அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்ற கல்லூரி வளாகத்தில் பெறப்பட்டன. பின்னர், திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் ஒரு பெட்டி வைத்து, அதில் வாக்குகளை செலுத்த வசதி செய்யப்பட்டது.

இதை, நேரில் வழங்குவதற்கான காலக்கெடு, வாக்குப்பதிவுக்கு ஒருநாள் முன்னதாக முடிவடைந்தது. அப்போது தபால் வாக்குகளை செலுத்தாதவர்கள், தற்போது அஞ்சல் மூலமாக செலுத்தி வருகின்றனர். வாக்கு எண்ணிக்கைக்கு ஒருநாள் முன்புவரை, இந்த வாக்குகளை தபால் மூலம் செலுத்த முடியும். இவ்வாறு செலுத்தப்படும் தபால் வாக்குகள், அஞ்சல் துறையினர் மூலமாக திருப்போரூர் தேர்தல் அலுவலரிடம் வழங்கப்படுகிறது. இவ்வாறு தபால் மூலம் பெறப்படும் வாக்குகள், ஒரு பெட்டியில் போடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த தபால் வாக்குகள் வைக்கப்படும் பெட்டிக்கு வழக்கமாக சீல் வைக்கப்படும். பெட்டியின் மேல் வாக்குச்சீட்டு உறைகளை போடும் அளவிற்கு வழி ஏற்படுத்தப்பட்டு இருக்கும். அதன் வழியாக தபால் வாக்குகள் அந்த பெட்டிக்குள் போடப்படும். ஆனால், திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கான தபால் வாக்குகள், சீல் வைக்கப்பட்ட பெட்டியில் போடப்படாமல் பூட்டை திறந்து வாக்குகளை உள்ளே போட்டு விட்டு பின்னர், மீண்டும் பூட்டி வைக்கும் வகையில் உள்ளது. இது அரசியல் கட்சியினருக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தபால் வாக்குகளால் ஒரு வேட்பாளரின் வெற்றி, தோல்வியே மாறிவிடும் சூழ்நிலை சில ஆண்டுகளாக ஏற்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு தபால் வாக்குகளுக்கு மதிப்பு உயர்ந்துள்ளது. எனவே, திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குகளையும் உரிய முறையில் சீல் வைத்த பெட்டியில் பாதுகாத்து வாக்கு எண்ணிக்கைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து அரசியல் கட்சியினரும் வலியுறுத்துகின்றனர்.

Tags : Thiruporur constituency ,
× RELATED திருப்போரூர் தொகுதியில் தபால்...