சுகாதார பணிகள் துணை இயக்குநர் ஆபீஸ் தென்காசிக்கு மாற்றம் திமுக கூட்டணி கட்சியினர் சங்கரன்கோவிலில் ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவில், ஏப். 13: மாவட்ட சுகாதாரப் பணிகளுக்கான இயக்குநர் அலுவலகம் தென்காசிக்கு மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினர் சங்கரன்கோவிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.  சங்கரன்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு சங்கரன்கோவிலில் கடந்த 1991ம் ஆண்டு உருவாக்கப்பட்டு சுகாதார மாவட்டத்தின் சுகாதாரப் பணிகளுக்கான துணை இயக்குநர் அலுவலகம் சங்கரன்கோவிலில் செயல்பட்டு வந்தது. இதன் நிர்வாகத்தின்  கீழ் 10 ஒன்றியங்கள் இடம்பெற்றுள்ளன. பொதுவாக ஒரு மாவட்டத்திற்கு  இரு மாவட்ட சுகாதார அலுவலகம் செயல்பட்டு வரும் நிலையில் சங்கரன்கோவிலில் 1991ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த சுகாதார பணிகளுக்கான துணை இயக்குநர் மாவட்ட அலுவலகத்தை தென்காசிக்கு மாற்றம் செய்ய கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முயற்சி நடந்தது. ஆனால், இதற்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தெரிவித்த கடும்  எதிர்ப்பை அடுத்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

 இதனிடையே கடந்த 10ம் தேதி தென்காசி கலெக்டர் சமீரன்  சங்கரன்கோவில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தை தென்காசிக்கு உடனடியாக மாற்ற உத்தரவிட்டார். இதனால் ஆவேசமடைந்த திமுக கூட்டணி கட்சியினர் சங்கரன்கோவில் துணை இயக்குநர் அலுவலகம் முன் திரண்டுவந்து அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் மதிமுக நகரச்செயலாளர் ஆறுமுகச்சாமி, திமுக பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் சங்கர், மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் அசோக்ராஜ், காங்கிரஸ் பிரமுகர்கள் பீர்முகம்மது, மனோகரன், திமுகவைச் சேர்ந்த ராஜ், குமார், சங்கை சரவணன் பிரகாஷ், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த பாலுச்சாமி, மனிதநேய மக்கள் கட்சி திவான் மைதீன், மதிமுக ராஜமாணிக்கம், ரத்தினகுமார், வாணிமுருகன், பொன்னுசாமி  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மாவட்டத்திற்கு 2சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகம் மாவட்ட அலுவலகம் இருக்கும் பட்சத்தில் ஏற்கனவே கடந்த 30 ஆண்டுகளாக செயல்படுத்தி செயல்பட்டு வரும் சங்கரன்கோவில் மாவட்ட அலுவலகத்தை மாற்றுவது பொதுமக்களிடையே பெரும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த போராட்டத்தின் எதிரொலியாக திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், சங்கரன்கோவில் திமுக வேட்பாளர் ராஜா, மதிமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தென்காசி கலெக்டரை நேற்று சந்தித்து பேசினர். அப்போது மாவட்ட கலெக்டர் சங்கரன்கோவில் அலுவலகம் கொரோனா பாதிப்பு உள்ளதால் இங்கு தற்காலிகமாக மாற்ற பட்டுள்ளது எனவும், புதிய ஆட்சி அமைந்தவுடன் தென்காசியில் புதிய அலுவலகம் துவங்க பட்டு சங்கரன்கோவில் அலுவலகம் அங்கேயே செயல்பட முயற்சி எடுக்கபடும் என தெரிவித்துள்ளார். இதனால் சங்கரன்கோவில் மக்களின் எதிர்பார்ப்பான சுகாதார அலுவலகம் இங்கு தொடரும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

Related Stories:

>