×

கொரோனா பரவல் அதிகரிப்பால் அரசு புதிய கட்டுப்பாடு எதிரொலி கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் பங்குனி தேரோட்டம் ரத்து கோயில் நிர்வாகம் அறிவிப்பு

கோவில்பட்டி, ஏப்.13: கொரோனா பரவலையொட்டி பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளதால் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் இன்று பங்குனி தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 15ம் தேதி வரை 11 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் சுவாமி, அம்பாள் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.  முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் நாளான இன்று (13-ம் தேதி) நடைபெறும் எனவும், அதனைத்தொடர்ந்து 10-ம் நாளான 14-ம் தேதி தீர்த்தவாரியும், 11-ம் நாளான 15-ம் தேதி தெப்பத் திருவிழாவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் கடந்த 10ம்தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

அதன்படி அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதுடன், திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அரசின் வழிகாட்டுதல்படி கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் இன்று (13ம் தேதி) தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோன்று நாளை நடைபெறும் தீர்த்தவாரியும், 15ம் தேதி தெப்பத்திருவிழாவும் ரத்து செய்யப்படுவதாகவும் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனா பரவலால் தேரோட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ராட்டினங்களுக்கு அனுமதி இல்லை
கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இதையொட்டி கோயில் வளாகத்தில் ராட்டினம், பொருட்காட்சி ஸ்டால்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும் இடம்பெறும். இந்தாண்டு தேரோட்டத்தையொட்டி கோயில் வளாகத்தில் ராட்டினம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதாலும், தேரோட்டம், தீர்த்தவாரி, தெப்பத்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாலும் ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை அமைத்தவர்கள் அவற்றை திரும்ப கழற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

Tags : Kovilpatti Shenbagavalliyamman Temple ,Panguni Therottam ,
× RELATED நெல்லை டவுனில் கரியமாணிக்க பெருமாள் கோயில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்