கடம்பூர் மலைப்பகுதி அரசு பள்ளி சுவர்களில் ஓவியம் வரைந்த தன்னார்வலர்கள்

சத்தியமங்கலம்,  ஏப். 13:    கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள இருட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய  நடு நிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.  இந்நிலையில், இந்த பள்ளியின் சுவர்களை சுத்தம் செய்து, வர்ணம் பூசி, பள்ளி  மாணவர்களுக்கு பாடம் கற்க தேவையான ஓவியங்கள் மற்றும் விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில், திருக்குறள் உள்ளிட்ட வாசகங்களை எழுதும் பணியில்  திருப்பூரைச் சேர்ந்த பட்டாம்பூச்சி அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். இந்த  அமைப்பைச் சேர்ந்த குழுவினர் அரசு பள்ளிகளை காப்போம் என்று உறுதிமொழியோடு  ஆண்டுதோறும் கோடை விடுமுறை நாட்களில் குறிப்பிட்ட அரசு பள்ளிகளை  தேர்ந்தெடுத்து பள்ளிகளின் சுவர்களை சுத்தம் செய்து, வர்ணம் பூசி  ஓவியங்கள் வரைந்து கொடுப்பதை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.  

இதனடிப்படையில், இந்த கோடைகாலத்தில் பட்டாம்பூச்சி அமைப்பினர் கடம்பூர்  மலைப்பகுதியில் உள்ள இருட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை  தேர்வு செய்து, அந்த பள்ளியில் உள்ள 3 பள்ளி கட்டிடங்கள் மற்றும் 130 அடி  நீளம் கொண்ட சுற்றுச்சுவரின் உட்புற பகுதிகளில் பல்வேறு வண்ணங்கள் கொண்ட  பெயிண்டை பயன்படுத்தி வர்ணம் பூசி, பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேவையான  அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் உள்ள படங்கள், ஓவியங்கள், திருக்குறள்  உள்ளிட்ட தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்கும் வாசகங்களை அழகாக எழுதியுள்ளனர்.  இந்த அமைப்பில், உள்ள பெரும்பாலானவர்கள் அரசு பள்ளி ஆசிரியர்கள் என்பதோடு,  எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், அரசு பள்ளியில் வாரக்கணக்கில் தங்கி இந்த  பணியை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலை கிராமங்களில்  உள்ள அரசு பள்ளியை தேர்ந்தெடுத்து இதுபோன்ற பணிகளை மேற்கொண்டுள்ளதை கடம்பூர்  மலைப்பகுதி பொதுமக்கள் வரவேற்றுள்ளதோடு இந்த அமைப்பினருக்கு பாராட்டுகளை  தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>