×

பெரிய மாரியம்மன் கோயில் கம்பம் லாரியில் கொண்டு சென்று ஆற்றில் விடப்பட்டது

ஈரோடு, ஏப். 13:  கொரோனா பரவல் காரணமாக பெரிய மாரியம்மன் கோயில் வகையிறா கம்பங்கள் நேற்று அதிகாலை லாரியில் ஏற்றி செல்லப்பட்டு காவிரி ஆற்றில் விடப்பட்டது. ஈரோடு பெரிய மாரியம்மன், சின்னமாரியம்மன், நடுமாரியம்மன் ஆகிய கோயில்களில் திருவிழா   ஆண்டுதோறும் சிறப்பாக நடப்பது வழக்கமாகும். குறிப்பாக, கோயில் கம்பம் எடுக்கும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதற்காக ஈரோடு முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்படும். கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக கோயில் விழா ரத்து செய்யப்பட்டது.

இந்தாண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விழா நடத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் கோயில் நிர்வாகத்திற்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து கடந்த 6ம் தேதி முதல் விழா நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை கோயில் கம்பங்கள் எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கமாக கோயில் கம்பத்தை பக்தர்கள் எடுத்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக காவிரி ஆற்றிற்கு செல்வது வழக்கம்.

ஆனால், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நேற்று அதிகாலை 5 மணிக்கு பெரியமாரியம்மன் கோயில் கம்பம் கோயில் பூசாரிகள் எடுத்து சரக்கு ஆட்டோவில் ஏற்றி மணிக்கூண்டு பகுதிக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து, சின்னமாரியம்மன், நடுமாரியம்மன் ஆகிய கோயில்களின் கம்பங்களும் மணிக்கூண்டு பகுதிக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் அங்கிருந்து 3 கோயில்களின் கம்பங்களும் ஒன்றாக லாரியில் ஏற்றி கருங்கல்பாளையம் வழியாக காவிரி ஆற்றிற்கு கொண்டு செல்லப்பட்டு தண்ணீரில் விடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கோயில் பூசாரிகள், கோயில் அதிகாரிகள் தவிர வேறு யாரும் பங்கேற்க போலீசார் அனுமதிக்கவில்லை.

Tags : Great Mariamman Temple ,
× RELATED பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா