×

அரிமளம் பேரூராட்சியில் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும்

திருமயம். ஏப்.13: அரிமளம் பேரூராட்சியில் சேதமடைந்து காணப்படும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை புனரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பேரூராட்சியில் சுமார் 4500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் அரிமளம் துணை மின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. இதன் மூலம் அப்போது அரிமளம் பேரூராட்சி முழுவதும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட நிலையில். காலப்போக்கில் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக குடிநீர் தேவை அதிகரித்ததால் அதன் பின் அரிமளம் பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில் நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இருந்தபோதிலும் அரிமளம் துணை மின் நிலையம் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து தற்போது அரிமளம் பாண்டியன் தெரு, கூத்தன் தெரு, சந்தப்பேட்டை வீதி, அண்ணாமலையார் வீதி, காயகட்டான் வீதி, எஸ் எம் எஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே சம்பந்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்ட பல ஆண்டுகள் ஆன நிலையில் தொடர் பராமரிப்பு இல்லாத காரணத்தால் தொட்டியில் பக்கவாட்டு சுவர், தொட்டி சுத்தம் செய்ய ஏற பயன்படுத்தும் மாடிப்படி, தொட்டியை தாங்கும் தூண்கள் உள்ளிட்டவைகளில் உள்ள சிமெண்ட் பூச்சுகள் சேதமடைந்து காணப்படுகிறது.

இதனால் பேரூராட்சி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட குடிநீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்ய மேலே ஏறுவதற்கும் அஞ்சுகின்றனர். எனவே குடிநீர் தொட்டி அசுத்தமடைந்த காணப்படுவதோடு, அசுத்தமான குடிநீர் வினியோகிக்க படுவதாக கூறப்படுகிறது. மேலும் தொட்டி ஆங்காங்கே பழுதடைந்த காணப்படுவதால் இடிந்து விழுமோ என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரிமளம் பேரூராட்சி பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்து புனரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Arimalam Municipality ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ