×

மக்கள் கோரிக்கை அறந்தாங்கி வௌ்ளாற்றில் ஜரூராக நடக்கும் மணல் கொள்ளை

அறந்தாங்கி, ஏப்.13: அறந்தாங்கி வெள்ளாற்றில் இருந்து இரவு பகலாக மணல் கடத்தப்படுவது குறித்து, காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அறந்தாங்கி பகுதியில் ஓடும் வௌ்ளாற்றில் இருந்து அரசு மணல் குவாரிகள் மூலம் மணல் விற்பனை நடைபெற்றது. தற்போது மணல் குவாரிகள் இல்லாததால், அறந்தாங்கி பகுதியில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டுமானப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சிலர் வௌ்ளாறில் இருந்து மணல் கடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அறந்தாங்கி சப்-கலெக்டர் ஆனந்த்மோகன், அறந்தாங்கி தாசில்தார் மார்ட்டின்லூதர்கிங், அறந்தாங்கி சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உள்ளிட்டோர் மணல் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்தனர்.

அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சியால் அறந்தாங்கி பகுதியில் இருந்து மணல் கடத்திய பல வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் தற்போது கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுதும் காவல்துறையினர் வாகனங்களில் செல்வோர் முகக்கவசம் அணியாவிட்டால் அவர்களிடம் இருந்து அபராதம் விதிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளதால், அறந்தாங்கியிலும் போலீசார் வாகன ஓட்டுனர்கள் முகக்கவசம் அணிந்து வருவதை கண்காணிக்க குழுவாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர். காவல்துறையினர் முகக்கவச கண்கானிப்பில் தீவிரம் காட்டி வருவதால், வௌ்ளாற்றில் இருந்து சிலர் இரவு பகலாக மணல் கடத்தி வருகின்றனர்.

மாட்டுவண்டிகள் மூலம் ஆளப்பிறந்தான், கோங்குடி, அத்தாணி உள்ளிட்ட பகுதிகளில் வௌ்ளாற்றில் இருந்து மணலை அள்ளிவந்து குவித்து வைத்து, பின்னர் அதை சரக்கு ஆட்டோ, மினிலாரிகளில் ஏற்றிச் சென்று பல ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். மணல் திருட்டில் ஈடுபடுபவர்களை அறந்தாங்கி வருவாய்த்துறையினர் தீவிரமாக கண்காணித்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்யும் நிலையில், அறந்தாங்கி காவல் துறையில் பணியாற்றும் சிலரின் உதவியால் தற்போது அறந்தாங்கியில் இரவு பகல் பாராத மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது.

எனவே மாவட்ட காவல்துறையினர் அறந்தாங்கி பகுதியில் மணல் கடத்தலை தடுக்க அறந்தாங்கி காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவதோடு, மணல் கடத்தும் நபர்களோடு தொடர்பு வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து மணல் கடத்தை தடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Aranthangi Vaular ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு