×

கொரோனா கட்டுப்பாட்டால் இந்த ஆண்டும் வேலப்பர் கோயில் சித்திரை திருவிழா ரத்து

ஆண்டிபட்டி, ஏப். 13:ஆண்டிபட்டி அருகேயுள்ள மாவூற்று வேலப்பர் கோயில் சித்திரை விழா கொரோனா கட்டுப்பாடுகளால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறையினர் தெரிவித்தனர். ஆண்டிப்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். இயற்கை சுழலில் அமைந்துள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா,  ஆடி அமாவாசை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். சித்திரை முதல் தேதியில் நடைபெறும் திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வதுடன், காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். மேலும் அங்குள்ள காவல் தெய்வம் கருப்பசாமிக்கு கிடா வெட்டி பக்தர்கள் சார்பில் அன்னதானம் நடைபெறும். விழாவிற்காக ஆண்டிபட்டியில் இருந்து அரசு சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளால் சித்திரை விழா, ஆடி அமாவாசை திருவிழா ரத்து செய்யப்பட்டது. அதன்பின் கொரோனா ஊரடங்கு தளர்வுகளால் கடந்த சில மாதங்களாக மாதாந்திர பவுர்ணமி, அமாவாசை, கார்த்திகை நாட்களில் பக்தர்கள் கோயிலுக்கு வந்து சென்றனர். இந்நிலையில் கொரோனா பரவல் அதிகமானதை தொடர்ந்து தமிழக அரசு மீண்டும் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி உள்ளது. இதனால் நாளை (ஏப்.14)  நடக்க இருந்த வேலப்பர் கோயில் சித்திரை விழா இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளை பக்தர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
ஆகம விதிப்படி கோயிலில் பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் பங்கேற்கவும், நேர்த்திக்கடன் செலுத்தவும் அனுமதி இல்லை என இந்து அறநிலையத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags : Velappar Temple Chittirai Festival ,
× RELATED குளச்சல் அருகே மீன்பிடித் தொழிலாளியிடம் செல்போன் திருடியவர் கைது