×

தேனி பழைய பஸ்நிலையத்தில் சமூக இடைவெளி மிஸ்சிங் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம்

தேனி, ஏப். 13: தேனி பழைய பஸ்நிலைய பகுதியில் கொரோனா கால கட்டுப்பாடுகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் பயணிகள் சமூக இடைவெளியின்றி கூடுவதால் தொற்று அதிகமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பானது கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கியது. இதன்பாதிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் வரை பெரியளவில் இருந்தது. பின்னர் இப்பாதிப்பானது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் படிப்படியாக குறையத் துவங்கியது. இதன்படி, இதுவரை தேனி மாவட்டத்தில் இந்நோய் தொற்றுக்கு 17 ஆயிரத்து 548 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 17 ஆயிரத்து 124 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இதுவரை 207 பேர் வரை இந்நோயால் உயிரிழந்துள்ளனர். தற்போது, கொரோனா பாதிக்கப்பட்ட 217  பேர் தேனி அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த அரசு நேற்று முன்தினம் முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதன்படி, மத வழிபாட்டு தலங்கள் இரவு 10 மணிக்கு மேல் திறக்கக்கூடாது, மத திருவிழாக்கள் நடத்த கூடாது. பஸ்களில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகள் தவிர நின்று கொண்டு பயணிக்க அனுமதிக்க கூடாது. கார்களில் டிரைவர் மற்றும் மூவரும், ஆட்டோக்களில் டிரைவர் மற்றும் இருவரும் பயணிக்கலாம். திரையரங்குகள், உணவு விடுதிகள், தேனீர் கடைகளில் 50 சதவீதம் அளவிற்கே வாடிக்கையாளர்களை அனுதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.இந்நிலையில் தேனி பழைய பஸ்நிலைய பகுதியில் நேற்று சாதாரண காலம் போல பயணிகள் எவ்வித கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏதுமில்லாமல் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் கூட்டம், கூட்டமாக கூடி நின்று பஸ்களில் ஏறி பயணித்தனர். பஸ்களிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளுக்கு மாறாக பயணிகளை நின்று பயணிக்க நடத்துனர்கள் அனுமதித்தனர். தனியார் பேருந்துகளின் நடத்துனர்கள் பேருந்தில் அனுமதிக்கப்பட்ட இருக்கை அளவிற்கு பயணிகள் ஏறிய பிறகும், பயணிகளை கூவி, கூவி அழைத்து ஏற்றி சென்றனர். கொரோனா கால கட்டுப்பாடுகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Theni ,
× RELATED தேர்தல் விதிமீறல் குறித்து புகார் தெரிவிக்கலாம்