கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவர் சேர்க்கை தொடங்க வேண்டும் பெற்றோர் கோரிக்கை

மதுரை, ஏப். 13: மதுரை மாவட்டத்தில் அரசின் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தில், நடப்பாண்டிற்காக மாணவர் சேர்க்கையை தொடங்க, பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர். 8ம் வகுப்பு வரை மாணவ, மாணவியர் கட்டாயமாக படிக்க வேண்டும் என்பதற்காக அனைவருக்கும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்மூலம், தனியார் பள்ளிகளில் குறிப்பிட்ட சதவீத இடங்களில் கட்டணமின்றி ஏழை மாணவர்களுக்கும் கல்வி கற்கலாம். பொதுவாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஜூன் மாதம் தொடங்கும். தனியார் பள்ளிகளில் மார்ச் முதல் மாணவர் சேர்க்கை நடக்கும். ஆனால், நடப்பாண்டில் கொரோனா 2ம் அலை பரவி வரும் காரணத்தால் ஊரடங்கு கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தனியார் பள்ளிகளில் மார்ச் மாதமிருந்து தொடங்கப்பட்டு விட்டது.

 ஏப்ரல் அல்லது மே மாதத்தில்தான் அரசின் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், மாணவர் சேர்க்கை நடைபெறும். தற்போது உள்ள நிலையில் இந்த திட்டத்தில் மாணவர் சேர்க்கை இன்னும் தொடங்கப்படவில்லை. சிறுபான்மை அந்தஸ்து பெறாத தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கு 20 சதவீத இடங்கள் இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் அரசின் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், நடப்பு ஆண்டிக்கான மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Related Stories:

>