கொரோனா கட்டுப்பாடுகள் எதிரொலி பழநி கோயிலுக்கு பக்தர்கள் வருகை குறைவு

பழநி, ஏப். 13: கொரோனா கட்டுப்பாடுகளின் காரணமாக பழநி கோயிலுக்கு பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா முதல் அலையில் கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சுமார் 180 நாட்களுக்கு மேல் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பின், கொரோனா பரவல் குறைய துவங்கியதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பின், படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திருவிழாக்கள் போன்றவை நடத்தப்பட்டன. தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகரிக்க துவங்கியது.

இந்நிலையில் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதன்படி கோயில்களில் தரிசன நேரம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் ஒன்றாக பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் கோயில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி பழநி கோயிலுக்கு தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வருபவர்கள் நுழையக் கூடாது.

இரவு 7 மணிக்கு மேல் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டாது. சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 1 மணிநேரத்திற்கு சுமார் 1000 பக்தர்கள் வீதம் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாச நோய், இருதய நோய், கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். பூஜைகளில் கலந்து கொள்ள பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

5 நபர்களுக்கு மேல் ஒரே இடத்தில் கூட்டமாக கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பதுள்ளிட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக பரபரப்பாக இருக்கும் கிரிவீதி, சன்னதி வீதி, அய்யம்புள்ளி சாலைகள் பக்தர்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் பக்தர்கள் வருகை குறைந்திருப்பதால் தற்போது அடிவாரத்தில் உள்ள பஞ்சாமிர்த கடைகள், லாடஜ்கள், ஹோட்டல்கள், ஆட்டோ- வாடகை வாகன ஓட்டுநர்கள் போன்றோரின் வாழ்வாதாரம் மீண்டுமொருமுறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>