×

மத்திய சிறையில் டிஜிபி ஆய்வு

:ஆத்தூர் மாவட்ட சிறையில் இருந்த  60 கைதிகள் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டிருந்தனர். இந்நிலையில், தமிழக சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங், சேலம் மத்திய சிறையில் ஆய்வு செய்து கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, 30க்கும் மேற்பட்ட கைதிகள், தண்டனையை குறைக்குமாறு கேட்டு மனு கொடுத்தனர். தொடர்ந்து ஜாகீர் அம்மாப்பாளையம்  திறந்தவெளி சிறையில் ஆய்வு செய்தார். அவருடன் கோவை சரக சிறைத்தறை டிஐஜி சண்முகசுந்தரம், கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

போலீசார் தேடுதல் வேட்டை: மேச்சேரி அருகே பள்ளிப்பட்டியை சேர்ந்த கோவிந்தன்(54).  உடையாப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் கள உதவியாளராக பணியாற்றி வந்தார். இவரது மகன் செல்வக்குமார், நொரச்சிவளவை சேர்ந்த தமிழ்நிதி  மகள் சவுந்தர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனிையே, கடந்த 4ம் தேதி ஏற்பட்ட தகராறில், சவுந்தர்யாவின் தந்தை தமிழ்நிதி, தாய் சித்ரா, சகோதரர்கள் பிரசாந்த், கோகுல் ஆகியோர் கோவிந்தனின் வீட்டிற்கு சென்று தாக்கியதில் கோவிந்தன்  உயிரிழந்தார். இதுபற்றி வழக்குபதிவு செய்த மேச்சேரி இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், தலைமறைவாக உள்ள தமிழ்நிதி, அவரது மனைவி சித்ரா, மகன்கள் பிரசாந்த், கோகுல் ஆகியோரை, செல்போன் எண்ணை கொண்டு தேடி வருகின்றனர்.

புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு: சேலம் ரயில்வே போலீஸ் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த பாபு, சென்னை வேப்பேரி உதவி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து கோவை ரயில்வே டிஎஸ்பியாக இருந்த குணசேகரன், சேலத்துக்கு நியமிக்கப் பட்டார். அவர் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு இன்ஸ்பெக்டர் சிவகாமிராணி மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

குப்பைகளை அகற்ற கோரிக்கை: அயோத்தியாப்பட்டணம் பகுதியில் சேலம்-சென்னை நெடுஞ்சாலை அருகே, வீடு மற்றும் கடைகளில் சேரும் குப்பை கழிவுகளை மலைபோல் குவித்துள்ளது. இதனால் கடும் துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. குப்பையை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

தீத்தடுப்பு விழிப்புணர்வு: மேட்டூர்  அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தல் தீத்தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை முகாம் நடைபெற்றது. நிலைய அலுவலர் ஜெயராஜ் தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது. இதேபோல்,மேட்டூர் வனச்சரக அலுவலகத்தில் பிரகாஷ் மற்றும் வன ஊழியர்களுக்கு தீத்தடுப்பு ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.  
பெண்ணை தாக்கியவர் கைது: சேலம் குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி பரிமளா(33). தாரமங்கலத்தில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இரு குழந்தைகள் உள்ள நிலையில், 10 ஆண்டுக்கு முன் கணவனை பிரிந்து பெற்றோருடன் பரிமளா வசித்து வந்தார். அவருக்கு  ஜங்சன் பகுதியை சேர்ந்த பயாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, 2 ஆண்டுகளாக தாரமங்கலத்தில் இருவரும் தனியாக வசித்து வந்தனர். 2 நாளுக்கு முன்பாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பரிமளா வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த பயாஸ் உருட்டு கட்டையால் பரிமளாவை தாக்கியுள்ளார். அவர் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெருகிறார். இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து பயாஸை கைது செய்தனர்.

திரையரங்கிற்கு ₹5 ஆயிரம் அபராதம்: ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் ஸ்ரீதேவி உத்தரவின் பேரில், திரையரங்குகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, ஆய்வாளர் பிரபாகரன், ஆகியோர்  மாரிமுத்து ரோட்டில் உள்ள திரையரங்கில் ஆய்வு செய்தனர். அங்கு வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இதையடுத்து தியேட்டர் உரிமையாளருக்கு ₹5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. காட்சி பொருளான சிசிடிவி கேமராக்கள்: ஆட்டையாம்பட்டி பகுதியில் குற்றச்செயலில் தடுக்க, காவல்துறை சார்பில் தனியார் கல்லூரி பங்களிப்புடன், 2 ஆண்டுக்கு முன்பு பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது. இதனால் பல குற்ற வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் சாலை மற்றும் சாக்கடை கால்வாய் பணியின் போது, சிசிடிவி கேமராக்களின் ஒயர்கள் துண்டிக்கப்பட்டது. தற்போது வரை அவை சரி செய்யப்படவில்லை.

5 முருங்கைக்காய் ₹10க்கு விற்பனை: சேலம் மார்க்கெட்டில் கடந்த அக்டோபர் முதல் ஜனவரி வரை ஒரு முருங்கைக்காய் ₹10 முதல் ₹20 வரை விற்பனை செய்யப்பட்டது. சில நாட்களில் கிலோ ₹500 முதல் ₹700 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது வரத்து அதிகரிப்பால் விலை கடும் வீழ்ச்சி அடைந்து 5 முருங்கைக்காய் ₹10 எனவும், சில இடங்களில் 7 காய் ₹10 எனவும், நீளமாக இருக்கும் முருங்கைக்காய் ஒன்று ₹5 என்றும் விற்பனை செய்யப்படுகிறது.
சாலை பணி தாமதம்: வீரபாண்டி ஒன்றியம், கல்பாரப்பட்டி ஊராட்சி கல்பாரப்பட்டி  விநாயகர் கோயில் அருகில் இருந்து, ஊற்று கிணத்துவளவு வழியாக கீழ்காட்டு வளவு வரை சுமார் 2 கி.மீ., தூரம் ₹1 கோடியே 27 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் சாலை அமைக்கப்படுகிறது. 8 மாதங்களாகியும் பணிகள் முழுமை பெறாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

விசிக  ஆர்ப்பாட்டம்: அரக்கோணம் இரட்டை கொலையை கண்டித்து,  சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் நாவரசன் தலைமை ஆர்ப்பாட்டம் நடந்தது.  தொண்டரணி மாநில செயலாளர் இமயவரம்பன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர்கள் (வடக்கு) வசந்த், (மேற்கு) அய்யாவு, மாநகர பொருளாளர் காஜாமொய்தீன், தெற்கு தொகுதி பொறுப்பாளர் வக்கீல் சசிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செல்வநாயகி அன்னை ஆலய தேர்பவனி:  இடைப்பாடி வெள்ளாண்டி வலசு புனித செல்வ நாயகி அன்னை ஆலய பாஸ்கா விழாவையொட்டி, தேர் திருவிழா நடந்தது. சிறப்பு திருப்பலியில், தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ், சேலம் மறை மாவட்ட பொருளாளர் ஜேக்கப்,  பங்கு தந்தைகளான இடைப்பாடி ஆசைத்தம்பி, தாரமங்கலம் ஆல்பர்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மேலும், சேலம் மாவட்ட ஆயர் சிங்கராயன் தலைமையில் சிறப்பு திருப்பலி  நடந்தது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

₹35 லட்சத்திற்கு பருத்தி ஏலம்: கொங்கணாபுரம்  கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. விவசாயிகள் 1550 மூட்டை பருத்தியை கொண்டு வந்திரந்தனர்.பிடி ரகம் குவிண்டால் ₹6464 முதல் ₹7519 வரையும்,  டிசிஎச் ரகம் குவிண்டால் ₹8569 முதல் ₹9509 வரையுமாக  மொத்தம் ₹35 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது. மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் முகாம்: ஓமலூர், தாரமங்கலம், காடையாம்பட்டி வட்டாரத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களில், செயற்கை கருவூட்டல் முகாம் நடக்கிறது. எனவே கால்நடை வளர்ப்போர், தங்கள் பசுக்களுக்கு இலவச செயற்கை கருவூட்டல் செய்து கொள்ளலாம்.  தங்களின் ஆதார், மொபைல் எண்ணை கட்டாயமாக வழங்க வேண்டும் என கால்நடைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED தேர்தல் விதிகள் குறித்து அனைத்து கட்சி கூட்டம்