ஆத்தூர் அருகே வனப்பகுதியில் மான் வேட்டையை தடுத்த வனக்காவலர் மீது தாக்குதல்

வாழப்பாடி, ஏப்.13: ஆத்தூர் அருகே மான் வேட்டையை தடுத்த வனக்காவலரை, மர்ம நபர்கள் துப்பாக்கியால் தாக்கி விட்டு, தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார், அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், ஆத்தூர்  கல்லேரிப்பட்டி அருகே உள்ள வனப்பகுதியில், இரவு நேரத்தில் கும்பல் ஒன்று மான் வேட்டையில் ஈடுபடுவதாக, வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து  நேற்று முன்தினம் இரவு, வனக்காவலர் கார்த்திக் கல்லேரிப்பட்டி அருகில் உள்ள வனப்பகுதியில்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது  அங்கு 2 பேர், நாட்டு துப்பாக்கியுடன் மான் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். வனக்காவலரை பார்த்ததும், அவர்கள் இருவரும்  தப்பியோடினர். இதை கண்ட கார்த்திக், அவர்களை துரத்திச் சென்றார். அப்போது அதில் ஒருவர், தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை திருப்பி, வனக்காவலர் கார்த்திக்கை சராமாரியாக தாக்கினார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத கார்த்திக், காயமடைந்து கீழே விழுந்தார். இதையடுத்து, இருவரும் தப்பியோடி விட்டனர். காயமடைந்த வனக்காவலர் கார்த்திக், நேற்று காலை ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், ஏத்தாப்பூர் இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குபதிவு செய்து, வனக்காவலர் கார்த்திக்கை துப்பாக்கியால் தாக்கிய ரவிச்சந்திரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மான் வேட்டையை தடுக்க சென்ற வனக்காவலரை, வேட்டையில் ஈடுபட்டவர்கள் நாட்டு துப்பாக்கியால் தாக்கிய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>