×

தலைமை ஆசிரியர்களுடன் பிளஸ்2 செய்முறை தேர்வு குறித்து சிஇஓ ஆலோசனை

சேலம், ஏப். 13: பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வில், நோய் பரவ வாய்ப்புள்ள உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டிற்கான பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் வரும் மே 3ம் தேதி தொடங்குகிறது. கொரோனா ஊரடங்கால், பள்ளிகள் மூடப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படாததால், பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் வினாத்தாள் தயாரித்து, தேர்வுகள் நடக்கிறது. முன்னதாக, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகளை விரைவாக நடத்தி முடிக்க தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் 2வது அலையாக வேகம் எடுத்து வருகிறது. இதனால், தகுந்த நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, செய்முறை தேர்வுகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 322 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 38,254 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.

இவர்களுக்கான செய்முறை தேர்வுகள் வரும் 16ம் தேதி ெதாடங்கி, 23ம் தேதி வரை நடக்கிறது. இதனை நடத்துவது குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. சேலத்தில் மாவட்ட கல்வி அலுவலர் சுமதி, சேலம் ஊரக மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், ஆத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் கணேஷ், சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலர் ராமசாமி மற்றும் இடைப்பாடி மாவட்ட கல்வி அலுவலர் விஜயா ஆகியோரது தலைமையில், 5 இடங்களில் கூட்டம் நடந்தது. இதில், சிஇஓ கணேஷ்மூர்த்தி கலந்து கொண்டு, தலைமை ஆசிரியர்களுக்கான அறிவுரைகளை வழங்கினார்.

இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், ‘‘பிளஸ் 2 செய்முறை தேர்வின்போது கொரோனா நோய் தடுப்பு நடவடிக்ைககளை முழுமையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது. மாணவர்களை சிறு, சிறு குழுக்களாக பிரித்து, குறிப்பிட்ட எண்ணிக்கையில் அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு குழுவை அனுமதிக்கும் முன்னரும், பின்னரும், கிருமி நாசினி தெளிக்க வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். மாணவர்களுக்கு இடையே, 6 அடி இடைவெளி விட வேண்டும். வேதியியல் செய்முறை தேர்வின்போது கிருமிநாசினி மூலம் தீ பற்ற வாய்ப்புள்ளது. எனவே அதுபோன்ற சமயங்களில் மாணவர்கள் கிருமிநாசினியை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம். மாறாக, சோப்பை கொண்டு கைகழுவ அறிவுறுத்த வேண்டும். மேலும், நோய் பரவ வாய்ப்புள்ள மைக்ரோஸ்கோப், உறிஞ்சுதல் உபகரணங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் உடல் வெப்ப பரிசோதனைக்குப் பின்னரே செய்முறைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா பாதிப்பு மற்றும் அறிகுறி உள்ள மாணவ, மாணவிகளுக்கு தனியாக வேறு நாட்களில் செய்முறைத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று  அறிவுறுத்தப்பட்டுள்ளது,’’ என்றனர்.

Tags : CEO ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி...