×

கலைநிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டு தெருக்கூத்து கலைஞர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

தர்மபுரி, ஏப்.13:தர்மபுரி மாவட்ட கிராமிய பேண்டு மற்றும் நாதஸ்வரம், தவில் இசைக்கலைஞர்கள் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் தணிகாசலம் தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
தர்மபுரி மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமிய பேண்டு மற்றும் நாதஸ்வரம், தவில், இசைக்கலைஞர்கள் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரமான கலைநிகழ்ச்சிகள் நடப்பது கோயில் திருவிழாக்களின் போது தான். தற்போது, கோயில் திருவிழாக்கள் நடத்த தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க நிவாரணம் மற்றும் கலைநிகழ்ச்சிகளை பாதுகாப்புடன் நடத்த அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதே போல், தர்மபுரி மாவட்ட அனைத்து கிராமிய கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், பம்பை கலைஞர் குமரவேல் தலைமையில் கொடுத்த மனுவில், ‘கொரோனா பரவல் காரணமாக, கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால், கிராமிய கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில், சிறிய கிராம கோயில்களில் மட்டுமாவது கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதிஅளிக்க வேண்டும். வேலை இழந்துள்ள கிராமிய கலைஞர்கள் ஒவ்வொருவருக்கும் ₹10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

காரிமங்கலம் கர்நாடக சங்கீத நாட்டுப்புற கலை நாதஸ்வரம், சாக்ஸபோன், தவில், பேண்டு இசைக்கலைஞர்கள் நலச்சம் சார்பில், தலைவர் கோவிந்தராஜ், மாதேஷ், சம்பத் உள்ளிட்ட கலைஞர்கள் கொடுத்த மனுவில், கோயில் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சிறிய கோயில் விழாக்களில் கலைநிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல், நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில், கடவுள் வேடம் அணிந்தபடி வந்து, கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க சிறிய கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : Collector's Office ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்