×

மார்த்தாண்டத்தில் பரபரப்பு நகை பட்டறையில் ₹12 லட்சம் கொள்ளையடித்த ஊழியர்

மார்த்தாண்டம், ஏப். 13: மார்த்தாண்டம் நகை பட்டறையில் 37 பவுன் நகை மற்றும் 1.4 லட்சம் பணம் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளை தொடர்பாக கடை ஊழியரான மேற்கு வங்கத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்(40). இவர் குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வடக்கு தெரு பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார். இங்கு கேரளாவை சேர்ந்த 2 ஊழியர்கள் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த சுஜய் ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். இங்குள்ள பட்டறையில் நகைகள் உற்பத்தி செய்து திருவனந்தபுரம் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.

இந்த பட்டறையில் நேற்று 80 பவுன் நகை மற்றும் ₹ 1.4 லட்சம் பணம் வைக்கப்பட்டிருந்தது. மாலையில் பட்டறையில் இருந்த 37 பவுன் நகை மற்றும் ₹ 1.4 லட்சம் மாயமாகி இருந்தது கண்டு மனோஜ் அதிர்ச்சி அடைந்தார். மேலும் ஊழியர் சுஜயும் மாயமாகி இருந்தார். பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அவர்தான் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடி இருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்தது. கொள்ளை போன நகை மற்றும் பணத்தின் மதிப்பு ₹ 12 லட்சம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து மனோஜ் மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினார். அதன்பின் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து கொள்ளை தொடர்பாக சுஜய் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினார். முதல்கட்டமாக சுஜயுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து அவர் யார்? யாருடன் தொடர்ப்பில் இருந்துள்ளார். மேற்கு வங்கத்தை சேர்ந்த அவரது கூட்டாளிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மார்த்தாண்டம் நகை பட்டறையில் ₹ 12 லட்சம் மதிப்பு நகை, பணம் கொள்ளை போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 தினங்களுக்கு முன்பு தான் மார்த்தாண்டத்தில் உள்ள பர்னிச்சர் கடையில் ₹ 7.5 லட்சம் கொள்ளை போனது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Marthandam ,
× RELATED மார்த்தாண்டத்தில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு