×

புதுச்சேரியில் உள்ளாட்சி ேதர்தலை நடத்த தயாராகும் அரசு அதிகாரிகள் சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை

புதுச்சேரி,  ஏப். 13: புதுச்சேரியில் 2021 சட்டசபை தேர்தல் வேலைகள் முடிந்த கையோடு   உள்ளாட்சி தேர்தல் பணிகளையும் உடனே தொடங்க மாநில தேர்தல் ஆணையம்   திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் மத்திய அரசிடமிருந்து கூடுதலாக   நிதி கிடைக்கும் என்பதால், அரசு அதிகாரிகள் தீவிரம் காட்டியுள்ளனர்.  புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த   6ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை   நடக்கிறது. அதன்பிறகு மாநிலத்தில் புதிய அரசு ஆட்சியமைக்கிறது. இந்த பணிகளை   முடித்த கையோடு புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் பணிகளை தொடங்க மாநில நிர்வாகமும், தேர்தல் ஆணையமும் திட்டமிட்டு வருவதாக தகவல்   வெளியாகி வருகின்றது.
ஏற்கனவே 1968க்கு பின் 2006ல் புதுச்சேரியில்   உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பிறகு 10 ஆண்டுகளாகியும் ரங்கசாமி,   நாராயணசாமி தலைமையிலான அரசு இத்தேர்தலை நடத்த முன்வரவில்லை.

உள்ளாட்சி பிரதி நிதிகளின் சேவைகளால் கிராமப்புறங்கள் மேம்படும், மாநிலத்துக்கு   கூடுதல் வருவாய் மத்திய அரசிடமிருந்து கிடைக்கும். இருப்பினும்   எம்எல்ஏக்களுக்கான அதிகாரம் பறிபோவதாக எழுந்த சர்ச்சையால் கடந்த அரசுகள்   இதில் ஆர்வம் காட்டவில்லை. இதனிடையே கவர்னராக இருந்த கிரண்பேடி   கடந்த 2018ம் ஆண்டே உள்ளாட்சி தேர்தலை புதுச்சேரியில் நடத்த உச்சநீதிமன்றம்   உத்தரவிட்டதை சுட்டிக்காட்டி தேர்தலை நடத்த   தனி அதிகாரியை தன்னிச்சையாக நியமித்தார். தற்போது மீண்டும்   புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இத்தகவலை அரசு   வட்டாரங்களும் உறுதிப்படுத்தி வருகின்றன. தற்போது புதுச்சேரியில் கவர்னர்   ஆட்சி அமலில் இருப்பதால் எளிதில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பணிகளை   அதிகாரிகளால் செய்ய முடியும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

புதுச்சேரியில் பல காரணங்களால்   உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இதனிடையே மாகேயை சேர்ந்த வழக்கறிஞர் அசோக்குமார் என்பவர், புதுச்சேரி அரசு நீதிமன்ற உத்தரவை   செயல்படுத்தவில்லை என வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து உச்சநீதிமன்றம்   புதுச்சேரியில் 6 மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த கண்டிப்பான   உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் சட்டசபை தேர்தலை முடித்த கையோடு   புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலையும் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது,   என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த முதல்கட்டமாக   2 மாதத்திற்குள் உள்ளாட்சி துறையானது தொகுதி வார்டுகள் மறுசீரமைப்பு   பணிகளை மேற்கொள்ள உள்ளது.

அதைத் தொடர்ந்து 4 மாதத்தில் மின்னணு   இயந்திரங்களை ஏற்பாடு செய்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உள்ளது. 10   ஆண்டுகளுக்குபின் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவதால் மத்திய   அரசிடமிருந்து கிடைக்கும் கூடுதல் நிதியால் புதுச்சேரி, காரைக்காலில்   கிராமப்புற பகுதிகள் மேம்படுத்தப்படும். நகர பகுதிகளும் கூடுதலாக   வளர்ச்சியடையும் நிலை உருவாகும். தேர்ந்தெடுக்கப்படும் 1,138 பிரதிநிதிகள் புதுச்சேரி   மாநிலத்தில் புதுச்சேரி, உழவர்கரை, காரைக்கால், மாகே, ஏனாம் என 5   நகராட்சிகளும், பாகூர், அரியாங்குப்பம், நெட்டப்பாக்கம், வில்லியனூர்,   மண்ணாடிப்பட்டு, திருநள்ளாறு, திருமலைராயன்பட்டினம், நிரவி, நெடுங்காடு,   கோட்டுச்சேரி என 10 கொம்யூன் பஞ்சாயத்துக்களும் உள்ளன. இவற்றில் மொத்தம் 98  கிராம பஞ்சாயத்துக்களும் உள்ளன. ஏற்கனவே புதுச்சேரியில் 1968ல்  முதன்முதலாக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதன்பிறகு 38 ஆண்டுகளுக்குபின் கடந்த  2006ல் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் 1,138 பிரதிநிதிகள்  தேர்வாகினர். அவர்களின் பதவிக்காலம் 13-7-2011 அன்று முடிவடைந்த நிலையில் அதன்பிறகு இப்பதவிகள் அனைத்தும் காலியாகவே தற்போதுவரை உள்ளது  குறிப்பிடத்தக்கது.

Tags : Pondicherry ,
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...