×

மாசடைந்த திருத்தேரி ஏரியில் அகற்றப்படாத குப்பை கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிப்பு: தொற்று நோய் பீதியில் பொதுமக்கள்

செங்கல்பட்டு: சிங்கபெருமாள்கோயில் பகுதியில் உள்ள திருத்தேரி ஏரியில், குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால், நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. இதனால், தொற்று நோய் ஏற்படும் பீதியில் பொதுமக்கள் உள்ளனர். காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் சிங்கபெருமாள்கோயில் ஊராட்சியில் 100 ஏக்கர் பரப்பளபில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான திருத்தேரி ஏரி, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ளது.  இந்த ஏரியை நம்பி சிங்கபெருமாள்கோயில், திருச்சூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெற்று வந்தது.  தற்போது, ஏரியை ஒட்டியுள்ள அனைத்து விவசாய நிலங்களும் பிளாட் போட்டு வீட்டு மனைகளாகவும், வீடுகளாகவும் கட்டப்பட்டுள்ளன.
இதனால் மழைக்காலங்களில் இந்த ஏரிக்கு வரும் மழைநீர், பாசன வசதி இல்லாததால் ஏரியிலேயே இருப்பு உள்ளது.

இதையொட்டி, அருகில் உள்ள செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள்கோயில், பாரேரி, விஞ்சியம்பாக்கம், திருச்சூர், சத்யா நகர், வீராபுரம் ஆகிய கிராமங்களுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. பஞ்சாயத்து குடிநீர் தேவையையும்  பூர்த்தி செய்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த ஏரியில் சுத்திகரிக்கப்படாமல், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சிறு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கலக்கிறது. இதனால்,   ஏரியில் உள்ள தண்ணீர் கருப்பு நிறமாக மாறி, அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.  சிலர் மாமிச கழிவுகள், கோழி கழிவுகளை மூட்டை மூட்டையாக வாகனங்களில் கொண்டு வந்து ஏரியில் கொட்டிவிட்டு செல்கின்றனர். இவை, ஏரியின் தண்ணீரில் கலந்து  முழுவதும் மாசடைந்து வருகிறது. சென்னை - திருச்சி தேசியநெடுஞ்சாலையில் வாகனங்களில் செல்பவர்கள் துர்நாற்றத்தால் மூக்கை பிடித்து சென்று வருகின்றனர்.  

முக்கிய நீராதரமாக விளங்கும் திருத்தேரி ஏரியில் குப்பை கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும். மீறுவோர் மீது பொதுப்பணித்துறை மற்றும் மாசுகட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம், ேமற்கண்ட ஏரியை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரகிளுக்குகு உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Thirutheri Lake ,
× RELATED மாசடைந்த திருத்தேரி ஏரியில்...