×

பொதுப்பணித்துறை ஏரியில் மண் எடுக்கும் அனுமதியை ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே புன்னப்பாக்கம் கிராமத்தில் வாழ்வாதாரமாக இருந்து வரும் ஏரியில் பொதுப்பணித்துறை மணல் எடுக்க அளித்த அனுமதியை ஆட்சியர் ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே புன்னப்பாக்கம் கிராம பொதுமக்கள் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். அதன் விவரம் வருமாறு: இந்த கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி 163 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியில் தேங்கியுள்ள நீர் தான் 2 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறவும், குடிநீர் மற்றும் கால்நடை பராமரிப்புக்கு பேருதவியாகவும் இருந்து வருகிறது. இதேபோல், சுற்றியுள்ள 10}க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

 தற்போதைய நிலையில் ஏரி முழுவதும் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் பறவைகள் வந்து தங்கும் இடமாகவும் மாறி வருகிறது. தற்போதைய நிலையில் மணல் எடுத்தால் மரங்கள் முழுவதும் வேரோடு அழிக்கப்படும் சூழ்நிலையுள்ளது. மேலும், சென்னை-பெங்களூரு, சென்னை-திருச்சி ஆகிய பகுதிகளுக்கு சமையல் எரிவாயு, பெட்ரோல்-டீசல் கொண்டு செல்வதற்கான குழாய் வழித்தடமும் ஏரிக்கு அருகில் செல்வதால் பெரும் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
தற்போதைய நிலையில் ஏரியில் மணல் எடுக்க சிலர் முயற்சித்து வருகின்றனர். இதற்கு பொதுமக்களிடம் அதிகாரிகள் கருத்துக்கேட்பு கூட்டம் எதுவும் நடத்தாமல் மணல் எடுக்க அனுமதி அளித்துள்ளனர்.

இந்த ஏரியில் மணல் எடுப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களையும் நடத்தி வருகிறோம். அதனால் கிராமத்தில் சுற்றுச்சூழல் பாதிக்காமல் இருப்பதற்காக ஏரியில் மணல் எடுக்க வழங்கிய அனுமதியை உடனே ரத்து செய்யவும் வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். நடவடிக்கை எடுப்பதாகவும், அதற்கு முன்னதாக கோரிக்கை மனுவை புகார் பெட்டியில் போட்டுவிட்டுச் செல்லும்படியும் மாவட்ட கலெக்டர் பொன்னையா கூறினார். இதைத் தொடர்ந்து புகார் பெட்டியில் மனுவை போட்டுவிட்டு அங்கிருந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.  

Tags : Collector's Office ,Public Works Lake ,
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்