புழல் பகுதியில் பெண்களுக்கான அரசு பள்ளி அமைத்து தர வேண்டும்: தமிழக அரசுக்கும், கல்வி துறைக்கும் பொதுமக்கள் கோரிக்கை

புழல்: புழல் பகுதியில் பெண்கள் மட்டும் படிக்க அரசு பள்ளி அமைத்து தர வேண்டும் என்று தமிழக அரசுக்கும், கல்வி துறைக்கும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை புழல் பொப்பிலி ராஜா அரசு மேல்நிலைப்பள்ளி, கண்ணப்ப சாமி நகர் உயர்நிலை பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி, புழல் காந்தி பிரதான சாலையில் அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவை  உள்ளன.  இந்த நான்கு பள்ளிகளிலும் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில்,  புழல் பகுதியில் பெண்களுக்கான தனியாக, அரசு பள்ளி இல்லாததனால் 5 கிலோ மீட்டர் தூரத்தில்  உள்ள செங்குன்றம்  அரசுப் பள்ளிக்கும், 6 கிலோ மீட்டர் தூரமுள்ள வடகரை அரசு ஆதிதிராவிடர் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளுக்கும் புழல் பகுதியில் உள்ள மாணவிகள் சென்று படித்து வருகின்ற அவலநிலை உள்ளது .

பல மணி  தூரம் சென்று வருவதால் பல்வேறு சிரமங்களை அவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக இதுகுறித்து பலமுறை புழல் பகுதியில் பெண்களுக்கான அரசு பள்ளி உருவாக்க வேண்டி தமிழக அரசுக்கும், கல்வித் துறைக்கும் பலமுறை கோரிக்கை வைத்தும் கண்டும் காணாமல் அதிகாரிகள் மெத்தன போக்கை காட்டி வருகின்றனர். இனி, வருகின்ற கல்வியாண்டிலாவது. அரசு உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புழல் காந்தி பிரதான சாலையில் இயங்கி வரும் அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்தி மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளியாக மாற்றி பெண்கள் மட்டும் படிக்கக்கூடிய பள்ளியாக உருவாக்க வேண்டும் என சுற்றுவட்டார பொதுமக்கள், கல்வித்துறைக்கும் தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.

அரசு பள்ளியை இங்கு கொண்டு வர, புழல் சக்திவேல் நகர், பாலாஜி நகர், மேக்ரோ மார்வெல் நகர், கன்னடபாளையம், காவாங்கரை, கண்ணப்ப சாமி நகர், அண்ணா நினைவு நகர், எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள்  இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

Related Stories: