வேலூர் மாவட்டத்தில்மூடப்பட்ட கொரோனா சிகிச்சை மையங்கள் மீண்டும் திறப்பு 2 ஆயிரம் படுக்கைகள் தயார்

வேலூர், ஏப்.12: வேலூர் மாவட்டத்தில் மூடப்பட்ட கொரோனா மையங்கள் மீண்டும் திறக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கு 1 லட்சம் ஜிங்க், வைட்டமின் மாத்திரைகள் வந்துள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 22 ஆயிரத்து 107 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 356 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்று வேலூர் மாவட்டத்தில் 94 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் கூடுதல் படுக்கை வசதியுடன் மருத்துவமனையில் வார்டுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

வேலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை, வேலூர் பென்டலென்ட் மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனை, நறுவீ மருத்துவமனை, நாராயணி மருத்துவமனைகளில் கொரோனா நோயாளி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர ஏற்கனவே விஐடி பல்கலைக்கழகம் மற்றம் குடியாத்தம் அபிராமி கல்லூரி ஆகிய இடங்களில் கடந்த ஆண்டு சிகிச்சை மையம் திறக்கப்பட்டன. கொரோனா குறைந்ததால் அந்த மையங்கள் மூடப்பட்டது. தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதையடுத்து விஐடி பல்கலைக்கழகம் மற்றும் அபிராமி கல்லூரியில் 800 படுக்கை வசதிகளுடன் வார்டு படுக்கை வசதிகளுடன் வார்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அங்கு இன்று முதல் முன்னேற்பாடு பணிகள் தொடங்கப்பட உள்ளது.

மேலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது வேலூர் மாவட்டத்தில் 60 ஆயிரம் டோஸ் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. மேலும் தடுப்பூசிகள் வரவழைக்கப்படும் என்று சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 டன் கபசுர பவுடர் இருப்பு

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்ப்பில் இருந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஜிங்க் மற்றும் வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர் வழங்கப்பட உள்ளது. இதற்காக சென்னையில் இருந்து 1 லட்சம் ஜிங்க் மாத்திரைகளும், 1 லட்சம் வைட்டமின் மாத்திரைகளும் வரவழைக்கப்பட்டுள்ளது. 1 டன் கபசுர பவுடர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>