×

மருந்து பற்றாக்குறை நிலவும்போது கொரோனா தடுப்பூசி திருவிழா சாத்தியமா? சுகாதாரத்துறை அதிகாரிகள் முழிப்பு

விருதுநகர், ஏப்.12: நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்த மாநிலங்களில் அதிகமாவதாக காட்டப்படுகிறது. தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு வரை குறைவாக காட்டப்பட்ட தொற்று பரவல் பாதிப்பு கடந்த 4 நாட்களாக அதிகமாக காட்டப்படுகிறது. உண்மையில் கொரோனா வைரஸ் பரவல் இருக்கிறதா, இல்லையா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. விருதுநகர் மாவட்ட மக்கள் தொகை சுமார் 20 லட்சம் பேரில் இதுவரை 17,100 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, 233 பேர் அதிகாரப்பூர்வமாக உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக கொரோனா 2வது அலை பரவல் வேகம் எடுத்திருப்பதாக தெரிவிக்கின்றனர். கொரோனா அதிவேகமாக பரவுதால் 45 வயதிற்கு மேற்பட்டோர் உடனே தடுப்பூசி போட அறிவுறுத்தப்படுவதால் தடுப்பூசி மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் அரசின் 26 மையங்களிலும், 5 தனியார் மையங்களிலும், சிவகாசி சுகாதார மாவட்டத்தில்  அரசின் 41 மையங்கள், 19 தனியார் மையங்கள் என 91 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.
கோவிசீல்டு தடுப்பூசி மட்டும் மாவட்டத்திற்கு அனுப்படும் நிலையில், கோவாக்சின் தடுப்பூசி அத்திபூத்தது போல் எப்போதாவது சில நூறு டோஸ்கள் மட்டும் வருகிறது. மாவட்டத்திற்கு வாரத்திற்கு 15 ஆயிரத்திற்கும் குறைவான தடுப்பூசி வரத்துள்ளது.  20 லட்சம் பேரில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 500 பேருக்கு, அதாவது 6 சதவீதம் பேருக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் ஒரு முறை போட்டோர் எண்ணிக்கை 75 ஆயிரத்திற்கும் அதிகம் இருக்கும். இந்நிலையில் பிரதமர் மோடி ஏப்.11 முதல் 14 வரை தடுப்பூசி திருவிழாவாக அனுசரிக்க உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், ‘‘மாவட்டத்தில் தற்போது தடுப்பூசி குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளது. நாளை(இன்று) சுமார் 12 ஆயிரம் தடுப்பூசி வரத்து எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மூலம் ஆங்காங்கே முகாம் நடத்தி ஒவ்வொரு முகாமிற்கும் 50 முதல் 100 பேருக்கு ஊசி போட்டு விட்டு இடத்தை காலி செய்து விட வேண்டிய நிலையில் இருக்கிறோம். தேவைக்கு மருந்துகள் இருந்தால் மட்டுமே மத்திய அரசு தெரிவித்தது போல் போட முடியும். கோவாக்சின் மருந்து கேட்டு வரும் மக்கள், இல்லாததால் திரும்பி செல்கின்றனர். தடுப்பூசி திருவிழா என அறிவித்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் லட்சத்திற்கும் அதிக டோஸ் இருப்பு இருக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : corona vaccine festival ,
× RELATED கொரோனா தடுப்பூசி திருவிழா