பொதுமக்களின் நலனுக்காக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை லோக் அதாலத் நடைபெறுகிறது முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி தகவல்

திருவில்லிபுத்தூர், ஏப்.12: பொதுமக்களின் நலனுக்காக 2 மாதங்களுக்கு ஒரு முறை மக்கள் நீதிமன்றம் நடைபெறுவதாக, முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி முத்துசாரதா தெரிவித்தார். விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள்  நீதிமன்றம் நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா தலைமையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,561 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. ரூ.8 கோடியே 18 லட்சத்து 64 ஆயிரத்து 469 தொகை வழங்க உத்தரவிடப்பட்டது. இதில் நீதிபதிகள் கதிரவன், சுந்தரி, சந்திரகாசபூபதி, பரம்வீர், சிவராஜேஷ் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராஜகோபால், சிவசுப்ரமணியம் மற்றும் வழக்கறிஞர்கள், எலும்பு முறிவு டாக்டர் சுரேஷ், காப்பீட்டு நிறுவன அலுவலர்கள், நீதிமன்ற ஊழியர்கள் தன்னார்வ சட்ட பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான முத்து சாரதா பேசுகையில், ‘‘பொதுமக்களின் நலனுக்காக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இந்த தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்று வருகிறது’’ என்று தெரிவித்தார். முன்னதாக விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், நீதிபதியுமான மாரியப்பன் வரவேற்றார். நீதிபதிகள் பரிமளா, காஞ்சனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதேபோல் விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம் வட்ட சட்டப்பணிகள் சார்பில் நீதிமன்ற கட்டட வளாகங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

Related Stories: