×

காரியாபட்டி அருகே டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தல்

காரியாபட்டி, ஏப்.12: காரியாபட்டி அருகே டாஸ்மாக் கடையை இடம் மாற்றக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு அருகே துலுக்கன்குளம் கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதனால் கிராமத்து இளைஞர்கள் மது அருந்திவிட்டு பிரச்சனைகளில் ஈடுபட்டு வருவது அதிகமாகி வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் டாஸ்மாக் கடையை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பிசிண்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தலைமையிலும்,  நந்திக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி முன்னிலையிலும்  நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மல்லாங்கிணறு எஸ்.ஐ சஜீவ் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சமாதானம் அடையாத பெண்கள் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அருப்புக்கோட்டை இன்ஸ்பெக்டர் கண்ணன் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்திய பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதால் பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பிசிண்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி கூறுகையில், ‘‘மதுபான கடையில் இருந்து கிராம பகுதிகளில் இருந்து பெட்டி பெட்டியாக வாங்கி வந்து 24 மணி நேரமும் மதுபானங்களை விற்கின்றனர். இதனை குடித்துவிட்டு பெண்களை அடிப்பது, வேலைக்கு போகாமல் ஆண்கள் சீரழிந்து வருகின்றனர்’’ என்றார். நந்திக்குண்டு ஊராட்சி மன்றத் தலைவர் விஜயலட்சுமி கூறுகையில், மதுபான கடையில் குடித்துவிட்டு வருபவர்கள் விவசாய நிலங்களில் சிகரெட் குடித்துவிட்டு தீவைத்து விட்டு விட்டு செல்கின்றனர். எனவே டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றி விட வேண்டும்’’ என்றார்.

Tags : Tasmac ,Kariyapatti ,
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்