ஆனைக்குட்டம் அணை பகுதியில் ஆலை கழிவுநீரால் உப்பாக மாறிய குடிநீர் காய்ச்சல், தொண்டை புண்ணால் மக்கள் அவதி

விருதுநகர், ஏப்.12: ஆனைகுட்டம் அணைக்கு அருகில் உள்ள ஓடையில் தனியார் ஆலை கழிவுநீரை விட்டதால் நிலத்தடி நீர் உப்பாக மாறிவிட்டது. இதனால் பொதுமக்களுக்கு காய்ச்சல், தொண்டை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  விருதுநகர் நகராட்சியில் 22 ஆயிரம் குடியிருப்புகள், கடைகளில் சுமார் 16 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளன. இவற்றிற்கான குடிநீர்  ஆனைக்குட்டம் அணை செக்டேம், அணைவெளிப்பகுதியில் 12 கிணறுகள், காருசேரி, ஒண்டிப்புலி கல்குவாரி மற்றும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டங்கள் உள்ளன. ஆணைக்குட்டம் அணையின் செக்டேம், 12 கிணறுகள், 4 பேர்வெல்களில் இருந்து எடுக்கப்படும் நீர் மூலமாகவும், கோடையில் அணை செக்டேம், கிணற்றுநீர் வற்றியதும், ஒண்டிப்புலி, காருசேரி குவாரி  தண்ணீர் மூலம் குடிநீர் தேவை கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் பூர்த்தி செய்யப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் பெறப்படும் நீரை கலந்து விநியோகிக்கின்றனர்.

16 ஆயிரம் குழாய்களுக்கு 16 மேல்நிலைத்தொட்டிகள் மூலம் 80 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது வாட்டும் வெயிலால் குடிநீர் தட்டுப்பாடு தலைதூக்கி உள்ளது. ஆனைக்குட்டம் அணையின் செக்டேம் வறண்ட நிலையில், வெளிப்புற கிணறுகளில் இருந்து தினசரி 12 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. அதுவும் நடப்பாண்டில் கடும் உப்புத்தண்ணீராக மாறி விட்டது. தாமிரபரணி திட்டத்தில் தினசரி 23 லட்சம் லிட்டர் வரத்து மட்டும் உள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால் 10 நாட்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்யப்படுகிறது. தாமிரபரணி தண்ணீருடன் ஆனைக்குட்டம் அணைப்பகுதி கிணற்று நீரை கலந்து விநியோகம் செய்யும் பகுதிகளில் உப்புத்தன்மை சற்று குறைவாக இருக்கிறது. ஆனைக்குட்டம் அணைப்பகுதி தண்ணீரை மட்டும் தனியாக விநியோகம் செய்யும் பகுதிகளில் உப்புதண்ணீரை குடிக்கும் மக்கள் கடந்த சிலநாட்களாக காய்ச்சல், தொண்டை புண் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.

நகராட்சி அலுவலர்கள் கூறுகையில், ‘‘ஆனைக்குட்டம் அணையை ஒட்டி தனியார் அட்டை ஆலை கழிவுநீரை மழைக்காலங்களிலும் திறந்துவிட்டு விடுகின்றனர். அணைக்கு அருகில் உள்ள ஓடையில் கழிவுநீரை விட்டதால் நிலத்தடி நீர் உப்பாக மாறிவிட்டது. தற்போது கடும் உப்பாகி விட்டது. 86 அடி கொள்ளளவுடைய ஒண்டிப்புலி குவாரியில் 26 அடியும், 60 அடி கொள்ளளவுடைய காருசேரி குவாரியில் 15 அடியும் தண்ணீர் உள்ளது. ஜூன் மாதத்திற்கு பிறகு எடுக்க வேண்டிய குவாரி நீரை, அணைப் பகுதி கிணறுகள், பேர்வெல் நீர் உப்பாகி போனதால் ஏப்ரல் மாதமே எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். குவாரி தண்ணீர் 45 நாட்கள் வரை தாங்கும், அதன் பின் என்ன செய்வது தெரியவில்லை. ஆணைக்குட்டம் அணைப்பகுதியில் அட்டை மில் கழிவுநீர் கலப்பதை நிரந்தரமாக தடை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அணைநீரை முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலை உருவாகி, நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்’’ என்றனர்.

Related Stories:

>