×

திருச்சி காந்தி மார்க்கெட்டில் பரபரப்பு

திருச்சி, ஏப். 12: திருச்சி காந்தி மார்க்கெட்டில் நேற்று சில்லறை கடைகளை காலி செய்ய மாட்டோம் என்று அடம் பிடித்த வியாபாரிகள் அகற்ற வந்த போலீசாரை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மார்க்கெட்டுகளில் சில்லறை விற்பனை கடைகளை மூட வேண்டும். மொத்த விற்பனை கடைகள் மட்டுமே இயங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அதன்படி திருச்சி காந்தி மார்க்கெட்டில் சில்லறை கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. சில்லறை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அவர்களுக்கு மாற்று இடமான பொன்மலை ஜி.கார்னர் ரயில்வே மைதானத்தில் கடைகள் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.  இதனால் மாநகராட்சி சார்பில் அந்த மைதானத்தில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடைக்கும் எவ்வளவு இடம் என அளவீடு செய்யப்பட்டு எல்லைகோடு வரையப்பட்டு தயார் நிலையில் உள்ளது. நேற்று (11ம் தேதி) முதல் சில்லரை வியாபாரிகள் காய்கறி விற்பனையை தொடங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனால் காந்தி மார்க்கெட்டின் நுழைவு வாயில் நேற்று முன்தினம் இரவே பூட்டப்பட்டு 5க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை சில்லறை வியாபாரிகள் காந்தி மார்க்கெட்டில் மற்றொரு பாதையான 6ம் எண் கேட் வழியாக உள்ளே சென்று வழக்கம்போல் வியாபாரத்தில் ஈடுபட்டனர். இதனால் காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. தகவலறிந்த மாநகராட்சி அலுவலர்கள், போலீசார் அங்கு வந்து வியாபாரம் செய்யக்கூடாது என கூறி சில வியாபாரிகளிடம் காய்கறிகள் மற்றும் பொருட்களை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள், போலீசார் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது வியாபாரிகள் கூறுகையில், ஜி.கார்னர் மைதானத்தில் கழிவறை, தண்ணீர், மின்விளக்கு வசதிகள் செய்து தருவதாக கடந்த முறையே கூறினர். ஆனால், எதுவும் செய்து தரவில்லை. தற்போதும் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை. ெஷட் அமைத்து தரவில்லை. கடும் வெயிலில் எப்படி கட்டாந்தரையில் வியாபாரம் செய்ய முடியும். மேலும் அங்கு பொருட்கள் விரயமாவதுடன் பொருட்களை கொண்டு செல்லும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

அதனால் ஜி.கார்னர் செல்ல முடியாது. காந்தி மார்க்கெட்டிலேயே தொடர்ந்து வியாபாரம் செய்கிறோம். இங்கு எவ்வளவு கடுமையான விதிமுறைகளை விதித்தாலும் கட்டுப்படுகிறோம் என்றனர். இதற்கு போலீசார் மற்றும் மாநகராட்சி சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் வேறுவழியின்றி நேற்று கையில் இருக்கும் பொருட்களை விற்றுக்கொள்ள வியாபாரிகள் அனுமதி கேட்டனர். எனவே நேற்று மதியம் 1 மணி வரை அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய அனுமதிக்கும் வரை ஒட்டு மொத்தமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறை கடைகளை திறக்கப்பட்ட மாட்டோம். ஜி.கார்னருக்கும் செல்ல மாட்டோம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் காந்தி மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Tags : Trichy Gandhi Market ,
× RELATED திருச்சியில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவின் வாகனப் பேரணிக்கு அனுமதி மறுப்பு