கடமலைக்குண்டு ரைஸ் மில் தெருவில் வாறுகால் இல்லாததால் கழிவுநீர் தேக்கம் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு

வருசநாடு, ஏப். 12: கடமலைக்குண்டுவில் உள்ள ரைஸ் மில் வடக்கு தெருவில் வாறுகால் இல்லாததால், கழிவுநீர் தேங்கி பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம், கடமலைக்குண்டுவில் உள்ள ரைஸ்மில் வடக்கு தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் போதிய அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். தெருக்களில் போதிய வாறுகால் இல்லாததால், கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், குடியிருப்போருக்கு மர்மக்காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர். மேலும், மழை காலங்களில் ஒரு சில பகுதிகளில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து கடமலைக்குண்டு ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும், கிராம சபைக் கூட்டங்களில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, ஊராட்சி நிர்வாகம் ரைஸ்மில் தெருவில் வாறுகால் அமைத்து கழிவுநீர் தேங்காமல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து முத்துராமலிங்கம் என்பவர் கூறுகையில், ‘ரைஸ் மில் தெருவில் போதிய வாறுகால் வசதி இல்லாததால், கழிவுநீர் தேங்குகிறது. குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட அனைவரும் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்படுகிறோம். கழிவுநீர் தேக்கத்தால் துர்நாற்றம் வீசுகிறது. ஊராட்சி நிர்வாகம் புதிய வாறுகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: