கடமலை-மயிலை ஒன்றியத்தில் பிஎஸ்என்எல் சேவை முடக்கம் தகவல் தொடர்பின்றி பொதுமக்கள் தவிப்பு

வருசநாடு, ஏப். 12: கடமலை-மயிலை ஒன்றியத்தில் பிஎஸ்என்எல் சேவை முடக்கத்தால், பொதுமக்கள் தகவல் தொடர்பின்றி தவித்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் 136க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, கண்டமனூர் ஆகிய ஊர்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில், சில ஆண்டுகளுக்கு முன், செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு செல்போன் சேவை, தரைவழி தொலைத்தொடர்பு சேவை ஆகியவற்றை வழங்கப்பட்டது. இதையடுத்து, தனியார் செல்போன் நிறுவனங்களும், டவர் அமைத்து செல்போன் சேவை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், கடமலைக்குண்டு, கண்டமனூர், மயிலாடும்பாறை, வருசநாடு ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக பிஎஸ்என்எல் சேவை முடங்குவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், வர்த்தகர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட உயரதிகாரிகள், கடமலை-மயிலை ஒன்றியத்தில் பிஎஸ்என்எல் சேவை முடக்கமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கடமலைக்குண்டு ஆசிரியர் கோவிந்தன் கூறுகையில், ‘பிஎஸ்என்எல் சேவை முடக்கத்தால் வங்கிகள், அஞ்சல்துறை, பள்ளி, கல்லூரி மாணவர்கள், இ.சேவை மையத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தேனி பிஎஸ்என்எல் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, இடையூறின்றி சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: