சிவகங்கை மாவட்டத்தில் 38 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

சிவகங்கை, ஏப். 12: சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 38 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பு மற்றும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடத்துவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி முன்னிலை வகித்தார். அரசு செயலரான கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கான சிறப்பு கண்காணிப்பு அலுவலர் மகேசன்காசிராஜன் தலைமை வகித்து பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் இதுவரை 2லட்சத்து 23 ஆயிரத்து 702 பேருக்கு கோவிட் 19க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கோவிட்-19க்காக ஆயிரத்து 500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. முகக்கவசம், கைகழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது தொடர்பாக முழு விழிப்புணர்வு பொதுமக்களிடம் 100 சதவிகிதம் ஏற்படுத்த வேண்டும். மாவட்டத்தில் 18 ஆயிரம் பொதுமக்களுக்கும், 20 ஆயிரம் களப்பணியாளர்கள், அரசு அலுவலர்கள் என இதுவரை சுமார் 38 ஆயிரம் பேருக்கு கோவிட்-19க்கான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் 12 ஆயிரம் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளது. கூடுதலாக தேவைப்படும் பட்சத்தில் சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்டு தேவைக்கேற்ப இருப்பு வைக்கப்படும். சிவகங்கை மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி, அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினி கிளினிக்குகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 122 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பேசினார். முன்னதாக, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் முந்தைய அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருவதை பார்வையிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல், இணை இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் யசோதாமணி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>