×

தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட பகுதிகளில் சித்திரை திருவிழா நடத்த அனுமதிக்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை


தொண்டி, ஏப்.12: தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட பகுதிகளில் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும் குலதெய்வ வழிபாட்டிற்கு பாத்தியப்பட்டவர்கள் வருவது வழக்கம் கடந்த ஆண்டு தடைபட்ட இந்த திருவிழா இந்த வருடம் நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் சித்திரை திருவிழா நடத்துவதில் சிரமம் ஏற்பட்டு அரசு தடை செய்தது. சித்திரை திருவிழா என்பது குலதெய்வ வழிபாட்டிற்கு ஈடான ஒரு விழாவாகும். தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட பகுதியில் உள்ள அய்யனார் மற்றும் கருப்பர் கோயில்களில் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும்.  இதற்காக வெளியூரில் இருக்கும் மக்கள் இந்த விழாவிற்கு வருவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக விழா தடை ஏற்பட்டதால் யாரும் வரவில்லை. இது மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது.  இந்நிலையில் இந்த வருடமும் அரசு மீண்டும் மத வழிபாட்டு தலங்களுக்கு மற்றும் மத கூட்டங்களுக்கு தடைவிதித்துள்ளது. இதனால் இந்த வருடமும் சித்திரை திருவிழா தடை ஏற்பட்டு விடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அதனால் அரசு பரிசீலனை செய்து விதிமுறைக்கு உட்பட்டு உரிய சமூக இடைவெளி மற்றும் உரிய நடவடிக்கை மூலம் திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நம்புதாளை பகவதி கூறியதாவது: சித்திரை மாதம் பவுர்ணமி அன்று நடக்கும் சித்திரை திருவிழா இப்பகுதி மக்களின் முக்கிய விழாவாகும். கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் சித்திரை திருவிழா தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்டது. இது மக்களிடம் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது/ மீண்டும் இந்த வருடமும் மத கூட்டங்கள் மற்றும் திருவிழாக்கள் நடத்த அரசு தடை செய்துள்ளது. நம்புதாளை, கண்ணாரேந்தல் உள்ளிட்ட கிராமங்களில் இருக்கும் கருப்பர் கோயில்களில் இவ்விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கடந்த வருடம் இந்த சித்திரை திருவிழா நடைபெறவில்லை. இந்த வருடம் நடக்கும் என்ற எண்ணத்தில் இருந்த மக்களுக்கு அரசின் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட அரசின் அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்பட்டு விழாவை நடத்த அரசு எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.

Tags : Chithirai festival ,Tondi ,Namputhalai ,
× RELATED விழிப்புணர்வு கூட்டம்