×

இதுவரை 15 பேர் பாதிப்பு ராமேஸ்வரத்தில் கொரோனா அதிகரிப்பு சமூக இடைவெளி, மாஸ்க் விழிப்புணர்வு இல்லை

ராமேஸ்வரம், ஏப். 12: ராமேஸ்வரத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இதுவரை 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையம், கோயில் போன்ற இடங்களில் சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் மாஸ்க் அணிந்து செல்வதில் மெத்தனம் காட்டுவதால் உள்ளூர் மக்களுக்கு அதிகளவில் கொரோனா தொற்று ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்க அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு ராமேஸ்வரம் பகுதியில் கொரோனாவால் பெரிய பாதிப்பு ஒன்றும் ஏற்படவில்லை.
ஆனால், கொரோனா இரண்டாவது அலை துவங்கிய நிலையில் கடந்த சில நாட்களில் மட்டும் ராமேஸ்வரம் பகுதியில் வசிக்கும் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், முறையான சோதனை செய்தால் நகரில் நூற்றுக்கும் மேற்பட்டவர்க்ளுக்கு கொரோனா அறிகுறி இருப்பதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ராமேஸ்வரம் பகுதியில் சுகாதாரத்துறையினரால் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் ஊசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.

பொதுமக்களும் பொது இடங்களில் முகத்தில் மாஸ்க் அணியாமல் செல்கின்றனர். போலீசாரும், நகராட்சி ஊழியர்களும் மாஸ்க் அணியாமல் செல்பவர்களுக்கு அப்ராதம் விதித்து வருகின்றனர். இருந்தபோதும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் போலீசாரைக் கண்டவுடன் தலையில் ஹெல்மெட் போட்டு கழட்டுவது போல் போலீசாரைக் கண்டதும் பெயரளவில் முகத்தில் மாஸ்க் போடுவதும் மற்ற நேரங்களில் கழற்றிவிடுவதுமாக ஏய்ப்பு காட்டி வருகின்றனர். ராமேஸ்வரத்திற்கு ரயிலில் வரும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளம் முகத்தில் மாஸ்க் எதுவும் அணியாமல் ரயில் நிலைய பிளாட்பாரங்களில் செல்கின்றனர். இவர்களை கண்காணிக்க பிளாட்பாரத்தில் ரயிலவே போலீசாரோ, ரயில்வே ஊழியர்களோ இல்லை. இருந்தாலும் கண்டுகொள்வதில்லை.

இது போல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தீர்த்தமாட சுவாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களில் பெரும்பாலானோர் மாஸ்க் அணிவதில்லை. அணிந்தாலும் வாய், மூக்கு பகுதிக்கு அணியாமல் வாய்க்கு கீழே நாடிப்பகுதியில் போட்டு செல்கின்றனர். கோயில் ஊழியர்களும் இதனை கண்டுகொள்வதில்லை. கோயிலில் பணியாற்றும் பணியாளர்கள் பலரும் மாஸ்க் போடுவதில்லை. சிறிய தேநீர் கடைகள், டிபன் கடைகள், உணவு விடுதிகளுக்கு செல்பவர்களும் மாஸ்க் அணிந்து செல்வது குறைவாகவே உள்ளது. இதனை கண்காணித்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டிய நகராட்சி நிர்வாகமும், சுகாதாரத்துறையும் இதில் மெத்தனமாக உள்ளனர். இந்நிலை தொடர்ந்தால் ராமேஸ்வரம் நகர் பகுதியில் நூற்றுக்கணக்கானவர்கள் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகும் நிலை உருவாகிவிடும்.

Tags : Rameshwaram ,
× RELATED பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு:...