×

அரிமளம் அருகே சாலை பராமரிப்புக்காக பல கோடி ஓதுக்கீடு செய்தும் பணிகள் துவங்கவில்லை

திருமயம்.ஏப்.12: புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஏம்பல் கிராமத்தை சுற்றி உள்ள சாலைகள் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றது இல்லை என கடந்த ஆண்டு தினகரன் நாளிதழில் விரிவாக படத்துடன் செய்தி வந்தது. இதனைத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏம்பல், இச்சிக்கோட்டை, கறம்ப வயல், ஆண்டாகோட்டை உள்ளிட்ட 14 சாலைகள் சீரமைக்க சுமார் 24 கோடி மதிப்பில் பணிகள் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் சேதமடைந்த சாலையை சீரமைக்க நிதிகள் ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்ட நிலையில் இதுவரை சாலைப் பணியை துவங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடைக்கோடி பகுதியில் ஏம்பல் கிராமம் உள்ளது. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயிகளாக இருப்பதால் விவசாய நிலங்களுக்குள் கிராமம் கிராமமாக குடியிருக்கின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு அரிமளம் ஒன்றியம் மூலம் சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஒன்றிய சாலைகள் தரம் இல்லாமல் இருப்பதால் சாலை அமைக்கப்பட்ட ஓரிரு வருடங்களுக்குள் புதிய சாலைகள் முற்றிலும் சேதம் அடைந்தது. இதனை தவிர்க்கும் வகையில் ஏம்பல் பகுதியிலுள்ள முக்கிய கிராம சாலைகள் நெடுஞ்சாலை துறைகளிடம் ஒப்படைத்து சாலைகள் புதுப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. எங்களது கோரிக்கையை கடந்த ஆண்டு தினகரன் நாளிதழில் செய்தியாக வெளிவந்தது.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையால் எங்கள் பகுதியில் முக்கிய சாலைகள் நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்கப்பட்டு சாலை பணிகள் மேற்கொள்ள நிதியும் ஒதுக்கப்பட்டது. இதனிடையே நிதி ஒதுக்கப்பட்டு பல மாதங்களாகியும் சாலை பணிகள் தொடங்குவதில் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் அலட்சியம் காட்டி வருவதாக தெரிகிறது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஏம்பல் பகுதியில் சாலை பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட சாலைகளை உடனே சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Arimalam ,
× RELATED அரிமளம் அம்மன் கோயிலில் பங்குனி...