×

கொள்முதல் நிலையத்தில் வெட்ட வெளியில் கிடக்கின்றன நெல் மூட்டைகள் வீணாகும் அபாயம் மேலூர் அருகே அவலம்

மேலூர், ஏப்.12: மேலூர் அருகே விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் வெட்ட வெளியில் அப்படியே கிடக்கின்றன. மேலூர் அருகே தெற்குதெரு ஊராட்சியில் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்வதற்காக அரசு மேல்நிலைப் பள்ளி அருகே கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு தெற்குதெருவை சுற்றி இருக்கும் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்தனர்.
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நெல் கிட்டங்கிக்கு அனுப்ப வேண்டிய அலுவலர்கள் இன்னும் அவற்றை அப்படியே போட்டு வைத்துள்ளனர். நெல்லுக்கு உண்டான தொகை விவசாயிகளுக்கு கிடைத்து விட்டதால், அவர்கள் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை பற்றி கவலை கொள்ளவில்லை.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூட்டைகள் திறந்த வெளியில் பல நாட்களாக கிடப்பதால், உள்ளே இருந்த நெல் மணிகள் வெளியில் கொட்டி கிடக்கிறது. இதனால் திருட்டு பயமும் உள்ளது. அத்துடன் திடீரென மழை பெய்தால், நெல் மூட்டைகள் நனைந்து சேதமாக வாய்ப்புள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனடியாக கிட்டங்கிக்கு அனுப்ப வேண்டிய அலுவலர்கள் அதை அலட்சியமாக போட்டு வைத்து, வீணாக்கி வருகின்றனர். இதனால் நஷ்டமாவது என்னவோ மக்களின் வரிப் பணம் தான் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Melur ,
× RELATED தனுஷுக்கு எதிரான மனு தள்ளுபடி