×

ரிசல்ட் நாளன்று முகவர்களுக்கு தேர்தல் ஆணையம் உணவு ‘கட்’ வேட்பாளர்களே வழங்க வேண்டும்

மதுரை, ஏப்.12: வாக்கு எண்ணிக்கையன்று வேட்பாளர்களின் முகவர்களுக்கு தேர்தல் ஆணையம் வழங்கும் உணவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால்  வேட்பாளர்களே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6ம் தேதி நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 2ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை பணியில் ஈடுபடும் வேட்பாளர்கள் தங்களது முகவர்களுக்கு காலை, மதியம், இரவு என 3 வேளை உணவு வழங்குவர். இதில் ஒரு சிலருக்கு குறிப்பிட்ட நேரத்தில் உணவு வரும், சிலருக்கு உணவு வராது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது அவர்களுக்கு உணவு வந்தால், அப்போது வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எண்ணிக்கை பணியும் பாதித்தது. இதனை தடுக்க தேர்தல் ஆணையமே குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து முகவர்களுக்கும் உணவு வழங்க ஏற்பாடு செய்தது. இதற்காக முகவர்களுக்கு வழங்கும் உணவுக்கான செலவை வேட்பாளரிடம் ஆணையம் வசூல் செய்து கொண்டது.

இந்நிலையில் மதுரையில் கடந்த 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் முகவர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் உணவு வரவில்லை. அந்த உணவும் கெட்டுப்போய் இருந்தது. இதனால் முகவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து கடந்த 2019 மே 23ம் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையன்று, உணவு வழங்குவதை தேர்தல் அதிகாரிகள் நிறுத்திக்கொண்டனர். அந்தந்த வேட்பாளர்கள் அவர்களுடைய சொந்த செலவில், அவர்களின் முகவர்களுக்கு உணவு வழங்க உத்தரவிடப்பட்டது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், பாதுகாப்பு போலீசார் உள்ளிட்டோர் என 5 ஆயிரம் பேருக்கு மட்டும் தேர்தல் ஆணையம் சார்பில் உணவு வழங்கப்பட்டது.

இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வாக்கு எண்ணிக்கை அன்று இப்பணி பாதிக்க கூடாது என்பதற்காக, இப்பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், போலீசார் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் உணவு வழங்கப்பட்டது. கடந்த முறை ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 2019ல் உணவு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. முகவர்களுக்கு வேட்பாளர்கள் தங்களது விருப்பம் போல் உணவு வழங்கினர். எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு மட்டும் உணவு வழங்கப்படும்’’ என்றார்.

Tags : Day ,Election Commission ,
× RELATED திருமருகலில் வாக்காளர் தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்