கொரோனா விதிமுறைகளுடன் கிராமங்களில் திருவிழா நடத்த அனுமதி வழங்க வேண்டும் குடிமக்கள் நுகர்வோர் மையம் வலியுறுத்தல்

மதுரை, ஏப். 12: கிராமப்பகுதியில் கொரோனா விதிமுறை கட்டுப்பாடுகளுடன் விழா நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மையம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் தலைவர் கர்ணன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தேர்தல் காலத்தில் கூட்டம், கூட்டமாக மக்கள் கூடும் போது வலுவடையாத கொரோனா, தற்போது தேர்தல் முடிந்தவுடன் தீவிரமாக பரவுவதாக கூறுவது ஏற்புடையதாக இல்லை. இது ஓட்டுப்பெட்டியை மாற்றுவதற்காக வலுவடைகிறதாக என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழகத்தில் சித்திரை, வைகாசி மாதங்களில் கிராமப்பகுதியில், கோயில் திருவிழா நடைபெறும். விழாவில் உறவினர்கள் மட்டும் ஒன்று கூடுவார்கள். இதுபோன்ற விழாக்களை நம்பி வாழும் மேளகாரர்கள், கரகாட்டம் ஆடல்பாடல், நாடகம் வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம், கச்சேரி போன்ற கலைஞர்கள் வாழ்கிறார்கள்.

கலைஞர்கள் இந்த திருவிழாவில் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் அந்த ஆண்டு முழுவதும் பிழைப்பு நடத்தமுடியும். இத்தொழிலை நம்பி ஆண்டு முழுவதும் காத்திருக்கும் கலைஞர்கள், கடந்த ஆண்டு கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இவ்வாண்டு வாழ்வளிக்கும் என்ற நம்பிக்கையோடு ஏற்கனவே திட்டமிடப்படி விழாவில் பங்கேற்பதாக கூறி, முன்பணத்தை வாங்கினர். ஆனால், திருவிழாவுக்கு தடையால் இக்கலைஞர்கள் புலம்புகிறார்கள். கடந்தாண்டு விழா நடைபெறாததால் இவ்வாண்டு விழாவில், நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் அதற்கான விரதம் இருந்து வந்தனர். இந்த தடையால், அவர்களும் மனவேதனை அடைந்துள்ளனர். கிராமங்களில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட திருவிழாக்கள் கொரோனா நடைமுறை விதிகளுடன் நடத்திக்கொள்ள அனுமதிக்க அரசு முன்வரவேண்டும்’’ என்றார்.

Related Stories:

>