×

கொரானோ தடுப்பு நடவடிக்கையால் 2வது ஆண்டாக தடைபட்டது கிராம கோயில்களில் திருவிழா, கிடா வெட்டும் நிகழ்ச்சி

புதுக்கோட்டை, ஏப். 12: புதுக்கோடடை மாவட்டத்தில் கிராம கோயில் திருவிழாக்கள் மற்றும் கிடாவெட்டு நிகழ்ச்சி கொரோனா ஊரடங்கால் தொடர்ந்து தடைபட்டு வருவதால் கிராம மக்கள் பெருத்த ஏமாற்றமடைந்து வருகின்றனர். இதனால் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களை 13 ஊராட்சி ஒன்றியங்கள் நிர்வாகம் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த கிராமங்களில் மாரியம்மன், பல்வேறு வகையான கருப்பர் கோவில், அய்யனார், பச்சாநாச்சி, முனியாண்டவர், வீரமாகாளி என பல்வேறு வகையான கிராம தெய்வங்களை மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 பஞ்சாயத்துகளில் ஆயிரக்கணக்கான சாமிகளுக்கு கோயில் கட்டி சாமி கும்பிட்டு வருகின்றனர். இதில் குலதெய்யம் மற்றும் கிராம தெய்வங்கள் என தனித்தனியாக விழாக்கள் எடுப்பார்கள். குறிப்பாக இந்த தெய்வங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மற்றும் வைகாசி மாதங்கள் திருவிழாக்கள் கொண்டாடுவது வழக்கம். புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலை மாரியம்மன், திருநல்லூர் முத்துமாரியம்மன், இருந்திரப்பட்டி மாரியம்மன் உள்ளிட்ட பல கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழாக்கள் நடைபெறும்.  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் நடைபெறும் திருவிழாவை ஒட்டி காப்பு கட்டுதல் தொடங்கி மண்டாகபடிகள் நடைபெறும். தொடர்ந்து 13வது நாள் தேர் திருவிழா நடைபெறும். இதையொட்டி வேண்டுதலுக்கு கிடா வெட்டும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

கிடா வெட்டு அன்று குடும்பத்தினர் அவர்களின் சொந்த பந்தங்களுக்கு தகவல் தெரிவித்து விருந்து வைக்கும் நிகழ்ச்சிநடைபெறும். இந்நிலையில் கடந்த ஆண்டு கொரானா தாக்கத்தால் இந்த திருவிழாக்கள்மற்றும் கிடா வெட்டும் நிழ்ச்சி நடைபெறாமல் தடைபட்டு போனது. இந்த ஆண்டு கட்டாயம் நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்போது ஏற்பட்டுள்ளது. . இதனால் தமிழக அரசு திருவிழாக்களுக்கு தடைவிதித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டைபோல் இந்த ஆண்டும் சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் நடைபெற இருந்த திருவிழாக்கள் தடைபட்டுள்ளது. இதனைய ஒட்டி நடைபெற இருந்த கிடா வெட்டும் நிகழ்ச்சியும் தடைபட்டுள்ளது. தொடர்ந்து 2 வது ஆண்டாக இந்த நிகழ்ச்சிகள் தடைபட்டு வருவதால் கிராமத்தினர் பெருத்த ஏமாற்றம் அடைத்துள்ளனர்.

இதுகுறித்து கிராமத்தினர் தெரிவித்ததாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் கிராம கோயில்களில் திருவிழா மற்றும் கிட வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். திருவிழா எனறால் அந்தகோயில் பூசாரிக்கு காப்பு கட்டி திருவிழா தொடங்கும். காப்புகட்டிய பிறகு அந்த கிராமமே பயபக்தியாக இருப்பார்கள். வெளியில் எங்கும் சாப்பிட மாட்டார்கள். மேலும் தினசரி கோயில்களில் விஷேசம் நடைபெறும். மேலும் கிடா வெட்டு நிகழ்ச்சி நடைபெறும். கிடா வெட்டு என்றால் ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது 500 பேருக்கு விருந்து வைப்பார்கள். வசதி படைத்தவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு விருந்து கொடுப்பார்கள். நெருங்கிய உறவினர்களுக்கு வீட்டிற்கே கொடுத்து அனுப்புவார்கள்.

இதனால் அந்த நாளில் அந்த கிராமமே விருந்தோம்பலில் திளைத்து இருக்கும். இதே போல் ஒரு கிராமத்தில் திருவிழா முடிந்தவுடன் அடுத்த ஊரில் திருவிழா தொடங்கும். அந்த ஊரில் உள்ளவர்கள் இந்த ஊரில் உள்ள உறவினர்கள், நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து விருந்து அளிப்பார்கள். கிடா வெட்டி விருந்து அளிப்பது மட்டுமல்ல. கிடா வெட்டு முன் கோயில் பூசாரிக்கு சாமி வந்து குறிசொல்லும் நிகழ்ச்சியும் நடைபெறும். இதில் குழந்தை வரம் இல்லாதவர்கள், தொழில் தொடங்குபவர்கள், குடும்பத்தில் மகிழ்ச்சியின்றி கஷ்டத்தில் இருப்பவர்கள் இது குறித்து தெரிவித்து நன்மை தேடிக்கொள்வார்கள். இப்படி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த நிகழ்ச்சிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிகழ்ச்சிகள் கடந்த ஆண்டு கொரானாவால் தடைபட்டதுபோல் இந்த ஆண்டும் கொரானாவால் தடைபட்டு இருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது.

Tags : Kida ,Corono blockade ,
× RELATED கிடா விமர்சனம்