×

மணமேல்குடி அருகே பரபரப்பு எஸ்எஸ்ஐ தாக்கி கொத்தனார் படுகாயம்

அறந்தாங்கி, ஏப்.12: மணமேல்குடி அருகே கொத்தனாரை தாக்கிய போலீஸ் எஸ்.எஸ்.ஐமீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடாயைச் சேர்ந்தவர் ராமு (32). இவர் தற்போது அறந்தாங்கியை அடுத்த தோப்புவயல் பகுதியில் குடியிருந்து வருகிறார். கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவர் வழக்கம்போல நேற்று வேலை பார்த்து விட்டு, மணமேல்குடியில் இருந்து கட்டுமாவடி செல்லும் தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்தின் படிக்கட்டில் நின்று கொண்டு ராமு கண்டக்டருக்கு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அந்த பேருந்தின் நடத்துனர் பேருந்தை நேராக கட்டுமாவடி செக்போஸ்ட் அருகே நிறுத்தி அங்கு பணியில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் துரைமுருகனிடம் ஒப்படைத்ததுடன், ராமு குடிபோதையில் பேருந்தில் தொந்தரவு செய்து, தன்னிடம் பிரச்னை செய்ததாக கூறிவிட்டு, புகார் எதுவும் கொடுக்காமல் சென்றுள்ளார;. எஸ்.எஸ்.ஐ துரைமுருகன், ராமுவிடம் ஏன் பேருந்தில் பிரச்னை செய்தீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு ராமு தகாத வார்த்தைகள் பேசியதாக கூறப்படுகிறது.

மேலும் ராமு எஸ்.எஸ்.ஐ துரைமுருகனின் சட்டையை பிடித்து தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து ராமுவிற்கும் எஸ்.எஸ்.ஐ துரைமுருகனுக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ராமுவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.காயமடைந்த ராமுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ராமுவிற்கு பலத்த காயம் ஏற்பட்டு தலையில் இருந்து ரத்தம் கொட்டியதால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ராமுவை தாக்கிய எஸ்.எஸ்.ஐ துரைமுருகன்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கட்டுமாவடி கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த மணமேல்குடி இன்ஸ்பெக்டர; சாமுவேல்ஞானம் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். மணமேல்குடி அருகே கொத்தனாரை தாக்கிய எஸ்.எஸ்.ஐ மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : SSS ,Si ,Sandamelukudi ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...