திண்டுக்கல் மாவட்டத்தில் தொற்றை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசியை அதிகரிக்க வேண்டும் சிறப்பு கண்காணிப்பாளர் அறிவிப்பு

திண்டுக்கல், ஏப். 12: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா தடுப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், கொரோனா தடுப்பு சிறப்பு கண்காணிப்பு அலுவலரான அரசு முதன்மை செயலர் மங்கத்ராம்சர்மா தலைமை வகித்தார். கூட்டத்தில் பேசிய சிறப்பு கண்காணிப்பாளர், ‘ஒரு பகுதியில் மூன்று வீடுகளுக்கு மேல், தொற்று இருந்தால் நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து, அந்த பகுதி மக்கள் வெளியில் வராத வகையில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். காய்ச்சல் சோதனைகளை அதிகப்படுத்தி, தடுப்பூசி போடுவதை மேலும் விரிவுபடுத்த வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்த வியாபார காய்கனி வளாகங்களில், சில்லரை வியாபார கடைகளுக்கு தடை விதிக்க வேண்டும். திருமண விழாக்களில் 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களில் 50 நபர்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக வணிகர்கள் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். விதியை மீறுபவர் மீதும் அபராதம் விதிக்கவும்,

நோய் பரவலைக் கருத்தில் கொண்டு, திருவிழாக்கள் மற்றும் மதம் சாய்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் உள்ளாட்சிதுறை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொது மக்களின் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்படுவதையும், கை சுத்திகரிப்பான் உபயோகப்படுத்துவது, முகக்கவசம் அணிவதையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்யவேண்டும். தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை தொழிற்சாலை நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 12ம் வகுப்பு மாதிரித்தேர்வு, பொதுத்தேர்வு, செய்முறை தேர்வில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை குறித்து கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. அரசு வழிகாட்டுதல்படி அனைத்து பள்ளிகளிலும் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்கள் வழங்க வேண்டும். நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று பொருட்கள் வழங்க வேண்டும்’ என தெரிவித்தார். இக்கூட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமி, டிஆர்ஓ கோவிந்தராசு, ஊரக வளர்ச்சி முகமை இயக்குநர் திலகவதி, சுகாதாரத்துறை இணை இயக்குநர் சிவக்குமார், துணை இயக்குநர் ஜெயந்தி உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories:

>