×

குஜிலியம்பாறை வட்டாரக் கல்வி அலுவலகத்தில் அலுவலர்கள் பற்றாக்குறையால் பணிகள் பாதிப்பு ஆசிரியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் கிடைப்பதில் சிக்கல்

குஜிலியம்பாறை, ஏப். 12: குஜிலியம்பாறை வட்டார கல்வி அலுவலகத்தில் அலுவலர்கள் பற்றாக்குறையால், சம்பளப் பட்டியல் தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டு, ஆசிரியர்களுக்கு சம்பளம் போடுவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும், பள்ளிகள் தோறும் சென்று ஆய்வு செய்வதில் தொய்வு ஏற்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டார கல்வி அலுவலகம் உள்ளது. இங்கு, குஜிலியம்பாறை  ஒன்றியத்தில் உள்ள 76 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், 14 நடுநிலைப்பள்ளிகள், 8  அரசு உதவி பெறும் பள்ளிகள் என 98 அரசு பள்ளிகளில் பணியாற்றும் 304  ஆசிரியர், ஆசிரியைகளின் பணிப்பதிவேடு, உரிய பதிவுகளை மேற்கொள்ளுதல்,  சம்பளப் பட்டியல் தயார் செய்தல், சேமநலநிதி கணக்குகள் மற்றும் இதர  பணப்பலன்கள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்நிலையில், வட்டார கல்வி அலுவலகத்தில் வட்டார கல்வி அலுவலர்கள்-2, டைப்பிஸ்ட்-1, இளநிலை உதவியாளர்-3, அலுவலக உதவியாளர்-2, கண்காணிப்பாளர்-1, பதிவு எழுத்தர்-1 என 10 பேர் பணியில் இருக்க வேண்டும். ஆனால், தற்போது ஒரு வட்டார கல்வி பெண் அலுவலர், கண்காணிப்பாளர்-1, இளநிலை உதவியாளர்-1, டைபிஸ்ட்-1 என 4 பேர் மட்டும் பணிபுரிகின்றனர். மேலும், இதில் கண்காணிப்பாளர் வேடசந்தூர் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு, அவ்வப்போது மாற்றுப்பணிக்கு செல்வதால், மூன்று பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். இது தவிர கடந்த 2018 முதல் வட்டார கல்வி அலுவலர் பணியிடம் ஒன்று, இரண்டு அலுவலக உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், அலுவலகப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

இந்நிலையில், ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் 304 ஆசிரியர், ஆசிரியைகளின் சம்பள பட்டியலை தயார் செய்து பிரதி மாதம் 20ம் தேதிக்குள் வேடசந்தூர் கருவூலக அலுவலகத்திற்கு தயார் செய்து அனுப்பினால்தான், அந்த மாதம் இறுதி நாளில் சம்பளம் பெற முடியும். ஆனால், குஜிலியம்பாறை வட்டார கல்வி அலுவலகத்தில் அலுவலகர்கள் பற்றாக்குறை காரணமாக சம்பளப் பட்டியலை தயார் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், அந்தந்த மாதத்திற்குரிய சம்பளம் ஆசிரியர்களுக்கு கிடைப்பதில் இழுபறி நீடிக்கிறது. தற்போது மார்ச் மாதம் இறுதி நாளில் கிடைக்க வேண்டிய சம்பளம் நேற்று முன்தினம் ஏப்.9ம் தேதி அன்றே ஆசிரியர்களுக்கு கிடைத்தது. அலுவலர்கள் பற்றாக்குறை குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    
இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ‘குஜிலியம்பாறை வட்டார கல்வி அலுவலகத்தில் போதிய அலுவலகர்கள் இல்லாததால், அலுவலக பணிகள் முடங்கி போய் உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ஆண்டிற்கு மூன்று பருவத்திற்கு நோட்டு, புத்தகம், சீருடை, செப்பல், ஜாமின்றி பாக்ஸ், கலர் பென்சில் உள்ளிட்ட அரசு நலத்திட்டங்கள் பள்ளிகளுக்கு நேரடியாக  கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. பள்ளிகள் குறித்து அறிக்கைகள் உடனடியாக கேட்கப்படுகிறது. இதனால், பள்ளி பட்டியல் தயார் செய்வதில் தொய்வு ஏற்படுகிறது. ஒரே ஒரு வட்டார கல்வி பெண் அலுவலர் மட்டுமே உள்ளதால், ஒன்றியத்தில் உள்ள 98 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளுவதிலும் சிரமம் ஏற்படுகிறது. இது குறித்து பலமுறை மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்கதையாகவே இருந்து வருகிறது.
எனவே,  குஜிலியம்பாறை வட்டார கல்வி அலுவலகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பி, ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் இழுபறி இல்லாமல் வழங்கிட மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Kujilyampara Regional Education Office ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு