×

கீழக்கரந்தை-அயன்வடமலாபுரம் சாலையில் சேதப்படுத்தப்பட்ட சிமென்ட் கால்வாயை மீண்டும் கட்ட வேண்டும் கலெக்டரிடம் கிராம மக்கள் வலியுறுத்தல்


கோவில்பட்டி, ஏப்.12:  கீழக்கரந்தை- அயன் வடமலாபுரம் சாலையில் சேதப்படுத்தப்பட்ட சிமென்ட் கால்வாயை மீண்டும் கட்டித்தர வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கலெக்டரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் புதூர் வட்டாரம் கீழக்கரந்தை-அயன் வடமலாபுரம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலை இரு கிராம மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. இப்பாதையில் மழைக்காலங்களில் மழைநீர் சூழ்ந்து விடுவதால் அதன் வழியாக மாட்டு வண்டி, டிராக்டர் மற்றும் பொதுமக்கள் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். இதையடுத்து இரு கிராம மக்களும் இப்பகுதியில் புதிய தார்சாலை அமைத்து தர அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் கடந்த 2015ம் ஆண்டு பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. அதன்பிறகு மழைக்காலங்களில் விவசாயிகள் சிரமமின்றி தங்கள் விளை நிலங்களுக்கும், பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைக்கும் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சாலை அமைத்து 5 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு வாய்க்கற்ற நிலையில் காணப்பட்டன. இதனை கருத்தில் கொண்டு மீண்டும் புதிய தார் சாலை அமைக்க கடந்த 2 மாதத்திற்கு முன், ரூ.2 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டது. அதனடிப்படையில் தற்போது புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு சாலையின் இருபுறமும் ஒரு மீட்டர் அகலத்திற்கு சரள்மண் அமைக்கப்படுகிறது. இந்த சரள்மண் அமைக்க டெண்டரில் உரிய நிதி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வெளியில் இருந்து சரள் மண் எடுத்து வராமல் சாலையின் இருபுறமுள்ள விவசாய நிலங்களில் இருந்து இயந்திரம் மூலம் குழி தோண்டி மண் எடுத்து பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு குழி தோண்டப்பட்டதால் சாலையின் இருபுறமுள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மழைக்காலங்களில் இக்குழிகளில் தேங்கும் மழை நீரால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும். சாலையின் கீழ்புறம் இருக்கன்குடி நீர்தேக்க திட்ட விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லக்கூடிய சிமென்ட் கிளைக்கால்வாய் உள்ளது. இது சாலையில் இருந்து 3 மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த சிமென்ட் கிளைக்கால்வாயை முழுவதுமாக உடைத்தெடுத்து சாலையின் பக்கவாட்டில் போட்டுள்ளனர். இதன் மூலம் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இருக்கன்குடி அணைக்கட்டு பிரிவு கால்வாய் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இப்பணி நடைபெறும் இடத்தில் எந்தவொரு அதிகாரியும் இருப்பதில்லை. எனவே விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்கு செல்வதற்கு எவ்வித தடங்கலும் இன்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும். அனுமதியின்றி இருக்கன்குடி அணைக்கட்டு பிரிவு கால்வாயை இடித்ததை மீண்டும் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் சார்பில் கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : Collector ,Lower Karanthai-Ayanavatamalapuram road ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...