தூத்துக்குடி மாநகரில் கொரோனா தடுப்பு பணி தீவிரம் விதிமீறல்களை கண்டறிய 2 குழுக்கள் அமைப்பு

தூத்துக்குடி, ஏப்.12: தூத்துக்குடி மாநகரில் கொரோனா தடுப்பு பணியை மாநகராட்சி நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. விதி மீறல்களை கண்டறிய 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகர பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், திருமண மண்டபங்களில் மாநகராட்சி அதிகாரிகள் குழுவினர் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் முறையாக வாடிக்கையாளர்கள் முககவசம் அணிய வேண்டும், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும் கொரோனா தடுப்பு விதிமுறை மீறல்களை கண்காணித்து, மீறும் நபர்களிடம் அபராதம் விதிப்பதற்காக பிரத்யேகமாக 2 தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மாநகரம் முழுவதும் ஆய்வு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.24 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர திருமண நிகழ்ச்சிகள், வங்கிகள், போக்குவரத்து மூலம் கொரோனா அதிகமாக பரவி வருவதாக தெரியவந்து உள்ளது. இதனால் அதிகாரிகள் இவை தொடர்பான கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் தூத்துக்குடியில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகர பகுதியில் உள்ள 7 நகர்ப்புற சுகாதார நிலையங்களில், முள்ளக்காடு, கணேஷ்நகர், திரேஸ்புரம் ஆகிய 3 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் முன்மாதிரி மையமாக கொண்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இநத மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. இங்கு கொரோனாவை தடுக்கும் விதமாக கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நகர் பகுதிகளில் அதிக அளவில் மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான விழிப்புணர்வும் மாநகராட்சி மூலம்  ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தொழில் நிறுவனங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ள்ளது. குறிப்பாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், என்.டிபிஎல். அனல்மின்நிலையம், வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்களில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதே போன்று மேலும் சில நிறுவனங்கள் தடுப்பூசி போடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன. அந்த நிறுவன ஊழியர்களுக்கும் விரைவில் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>