சிவகிரி, அம்பையில் லோக் அதாலத்தில் 247 வழக்குகளுக்கு தீர்வு

சிவகிரி, ஏப். 12: அம்பை, சிவகிரியில் நடந்த லோக் அதாலத்தில் 247 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. சிவகிரியில் இயங்கும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் தேசிய அளவில் நடைபெறும் மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. சிவகிரி நீதிபதி பிரியங்கா தலைமை வகித்தார். சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள் விசாரணை செய்து சமரச முடிவு வழக்குகள் எடுத்து முடிக்கப்பட்டன. சிவில் மற்றும் குற்ற வழக்குகளில் நிலம் சம்பந்தமான பிரச்சனை, வாரிசு சான்று வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் போன்ற பல வகையான குற்ற வழக்குகள் முடிக்கப்பட்டன.

இவற்றில் சிவில் வழக்குகள் 8ம், குற்றவழக்குகள் 225ம் என மொத்தம் 233 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டது. குற்ற வழக்குகளில் குற்றவாளிகள் சமரசமாக வழக்கை ஒத்துக்கொண்டு முடித்ததின் பேரில் அபராதமாக ரூ.2,99,100 செலுத்தினர்.

சமரச அமர்வில் வழக்கறிஞர்கள் சட்டப்பணிகள் குழு உறுப்பினர் செந்தில்குமார், ராதாகிருஷ்ணன், மருதப்பன், ராமராஜ், பரமசிவம், தெய்வக்குமார், கண்ணன், சின்னத்துரை, வன்னியராஜா, ஆகியோர்களும் வழக்காடிகள் மற்றும் வாசுதேவநல்லூர் பேரூராட்சி நிர்வாக அலுவலர் சுதா உள்பட பலர் பங்கேற்றனர்.

அம்பை:  அம்பை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற லோக் அதாலத்திற்கு அம்பை சார்பு நீதிபதி கவிதா தலைமை வகித்தார். உரிமையியல் நீதிபதி செந்தில்குமார், குற்றவியல் நடுவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அம்பையில் நீண்ட நாள்களாக தீர்வு காணாமல் கிடந்த 107 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 14 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.32,72,565 தொகை வசூல் செய்யப்பட்டது. இதில் அம்பை ஒருங்கிணைந்த நீதிமன்ற பணியாளர்கள், அம்பை நீதிமன்ற வக்கீல்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

Related Stories: