×

கொள்ளிடம் ஆற்றங்கரையில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

கொள்ளிடம், ஏப்.12:கொள்ளிடம் ஆற்றங்கரையில் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறாக நீண்டு வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச்சாவடியிலிருந்து சந்தப் படுகை, திட்டுபடுகை, நாதன்படுகை, முதலைமேடு, அளக்குடி, மகேந்திரப்பள்ளி மற்றும் காட்டூர் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் கொள்ளிடம் ஆற்றின் வலது கரை சாலையில் இரண்டு புறங்களிலும் 3கிமீ தூரத்திற்கு கருவேல மரங்கள் நீண்டு வளர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகின்றன.

சாலையை பாதிக்குமேல் அடைத்துக்கொண்டு உள்ளதால் சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் நடந்து செல்பவர்களும் அடிக்கடி கருவேல மரங்கள் உடலில் பட்டு காயத்தை ஏற்படுத்தி விடுவதால் சிரமம் அடைகின்றனர். மேலும் கண்ணில் பட்டால் கண் பார்வை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இரவு நேரங்களில் இந்த சாலையின் வழியே செல்லும் இளைஞர்கள்,பெண்கள் மற்றும் முதியோர்கள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர்.

பள்ளி செல்லும் மாணவர்கள் சைக்கிள் போன்ற இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்த சாலையில் நீண்டு வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற கோரி பல முறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருவேல மரங்களை அகற்றி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kollidam river bank ,
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...