ஓசூரில் கொரோனா சிறப்பு மையத்தில் கலெக்டர் ஆய்வு

ஓசூர், ஏப்.12: ஓசூர் பட்டு வளர்ச்சிதுறை கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் அரசு மருத்துவமனையில் செய்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், பாதிக்கப்பட்டோரை தனிமை படுத்தும் மையத்தில் வைத்து சிகிச்சை அளிக்கும் வகையில், பட்டு வளர்ச்சி மையத்தில் சிறப்பு கொரோனா தனி வார்டு அமைக்கப்பட்டள்ளது. மேலும் அரசு மருத்துவமனையில் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கொரோனா பரவல் 2வது அலையை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தற்போது வெளிநாடுகளில் உருமாறிய கொரோனாவின் தாக்கம், அண்டை மற்றும் இதர வெளிமாநிலங்களில் அதிகரித்து வருகிறது.

இதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் ஏற்கனவே நடைமுறையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளுடனும் வரும் 30ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2 அரசு கொரோனா தொற்று பரிசோதனை ஆய்வகங்கள் மற்றும் 3 தனியார் ஆய்வகங்கள் மூலம்  2,45,918 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 96,340 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது 974 படுக்கை வசதிகளுடன், கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் உள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். வணிக வளாகங்கள், அங்காடிகள், காய்கறி சந்தை உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லும் போது முககவசம் கட்டாயம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். மேலும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் இயங்கும் வணிக வளாகங்கள், அங்காடிகள் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார். முன்னதாக, அவர் ஓசூர் மாநகராட்சியில், 80 படுக்கை வசதிகள் கொண்ட பட்டு வளர்ச்சித்துறை கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் 120 படுக்கை வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் மேற்கொளள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன், இணை இயக்குநர் (நலப்பணிகள்) மருத்துவர் பரமசிவன், தலைமை மருத்துவர் பூபதி, மருத்துவர்கள் கார்த்திக், அமுதா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories:

>