×

சம்பள உயர்வு கேட்டு கர்நாடக பஸ் ஸ்டிரைக் 5வது நாளாக நீடிப்பு

ஓசூர், ஏப்.12: சம்பள உயர்வு உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நேற்று 5வது நாளாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால், பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து, ஓசூருக்கு நாளொன்றுக்கு சுமார் 80 கர்நாடக மாநில அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் ஓசூர் வழியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு நாளொன்றுக்கு 100க்கும் மேற்பட்ட அம்மாநில அரசு பஸ்கள் இயக்கப் பட்டு வருகின்றன. இந்நிலையில், கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், சம்பள உயர்வு உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 7ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அம்மாநில அரசு பஸ்கள், ஓசூருக்கு இயக்கப்படவில்லை. ஆனால், தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு, தமிழக அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.இதனிடையே, பெங்களூரு நகர் பகுதியில் இயக்கப்படும் கர்நாடக அரசு பஸ்கள், 5வது நாளாக நேற்றும் ஓசூருக்கு இயக்கப்படவில்லை. கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதால், தமிழக பஸ்களில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, குறைந்த அளவு பயணிகளே ஏற்றப்படுகின்றனர். இதனால் போதிய பஸ் வசதி இல்லாமல், அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

Tags : Karnataka ,
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...