×

வீராணம் ஏரியில் செத்து மிதக்கும் மீன் குஞ்சுகள் மீன்பிடிக்க அனுமதி வழங்க கோரிக்கை

காட்டுமன்னார்கோவில், ஏப்.12:    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள வீராணம் ஏரி, விவசாயத்திற்கு மட்டுமின்றி உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கி வருகிறது. ஏரியின் கீழ்கரையில் உள்ள லால்பேட்டை, திருச்சின்னபுரம், நத்தமலை, தென்பாதி, கலியமலை, விருதாங்கநல்லூர், கூளாப்பாடி, வாழைக்கொல்லை உள்ளிட்ட கிராமங்களில் 500 குடும்பங்களும், மேல்கரையில் உள்ள கருணாகரநல்லூர், சித்தமல்லி, சோழத்தரம், புடையூர் ஆகிய கிராமங்களில் 1500 என வீராணம் ஏரியை நம்பி சுமார் 2000க்கும் மேற்பட்ட உள்நாட்டு மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் நலனுக்காக 6 கூட்டுறவு சங்கங்களின் மூலம் வலை மானியம், ஏரியில் மீன்குஞ்சுகளை விடுதல் போன்ற திட்டங்கள் தமிழக அரசின் மீன் வளத்துறை வாயிலாக செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 2019 மற்றும் 2020 ஆகிய இரண்டு வருடங்களில் ஏரி வற்றாமல் கிட்டத்தட்ட 7 முறை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் கடந்த இரு வருடங்களாக மீனவர்கள், ஏரியில் மீன்பிடித்து வருவாய் இழப்பின்றி தொழிலை பார்த்து வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு அபரிதமான மழைப்பொழிவு, தண்ணீர் வரத்து இருந்தும் ஏரியை வடிய வைப்பதிலேயே பொதுப்பணித்துறை முனைப்பாய் இருந்தது. கடந்த மாதம் இறுதியில் வற்ற துவங்கி தற்போது வீராணம் ஏரி முழுவதும் வறண்டு போனது. ஏரி வற்றும் தருவாயில், வாருவலையில் மீன் பிடிக்க மீன்துறை சார்பில் அனுமதி வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு வாருவலைக்கு லால்பேட்டை மீன்வளத்துறை நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. காலம் கடந்துவிட்டதால் மீன்குஞ்சுகள் தண்ணீர் வற்றியதன் காரணமாக செத்து மிதந்து வீணாகியதோடு, துர்நாற்றத்தையும், சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தியுள்ளன. இதனால் ஆத்திரமடைந்த மீனவர்கள் இன்று (12ம் தேதி) உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் ஏரி முற்றிலும் வறண்டு போகும் சூழல் இருப்பதால் உடனடியாக வாருவலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Veeranam Lake ,
× RELATED சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி...